நியமனத்தை மீள வழங்குமாறு செயற்திட்ட உதவியாளர்கள் கோரிக்கை!

job
job

தங்களது நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட  செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று(புதன்கிழமை) மகஜர் ஒன்றினை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “நல்லாட்சி அரசாங்கம் 27.03.2019 அன்று எடுத்த அமைச்சரவை முடிவின்படி (எண்: 19/0888/105 / 015-1),தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகங்கள் மூலம் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பங்கோரி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பிற்காலத்தில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டு நேர்காணல்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றன. பின்னர் 2019 அன்று 6547 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டது, மேலும் நியமிக்கப்பட்டவர்கள் தங்களது கடமைகளை தமது தொடர்புடைய அலுவலகங்களில் ஏற்றுக்கொண்டனர்.

இந்தச் சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதுடன், நியமனத்தை இடைநிறுத்திய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் 23.09.2019 அன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் தொலைநகலில் அனுப்பப்பட்டது.

மேற்கண்ட நியமனங்கள் 16.09.2019 அன்று வழங்கப்பட்டன என்பதையும், தேர்தலுக்கான திகதி 18.09.2019என்று அறிவிக்கப்பட்டதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நியமனங்களை மீட்டெடுக்கும் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைநகலில் அனுப்பப்பட்டது.

நாங்கள் 18.11.2019 அன்று மாவட்ட செயலகங்களில் எங்கள் கடமைகளை ஏற்கச் சென்றபோது, ​​அத்தகைய மேலதிக தகவல்கள் அவர்களால் வழங்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், எங்கள் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் மேற்கண்ட நியமனத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

சுமார் எட்டு மாதங்களாக நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம். இதன் விளைவாக, நாமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம், வாழ்வாதார இழப்பு காரணமாக கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.

ஆகையால், எங்கள் குறைகளை தயவுசெய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்வதோடு, எமது செயற்திட்ட உதவியாளர் நியமனம் குறித்து ஆவனம் செய்யும் படி, வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில்  கேட்டுக்கொள்கின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.