மீண்டும் இன்று முதல் பாடசாலைகள் திறப்பு

1593222994 school reopen 2 620x330 2

கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இன்று முதல் திறக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் குறித்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் பாடசாலை திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

எதிர்வரும் ஒரு வாரக்காலப்பகுதியில் பாடசாலைகளை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் பாடசாலைகளில் தொற்று நீக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக எதிர்வரும் ஆறாம் திகதி முதல் 5,11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

அடுத்த மாதம் 27 ஆம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று முதல் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கான எந்தவித ஆலோசனை மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான விடயங்கள் அறிவிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.