தலைவர் பிரபாகரனுக்கு எப்போதுமே என் மீது வலுவான நம்பிக்கையிருந்தது! கருணா பேட்டி

karuna amman
karuna amman

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நலிவடைந்த நிலையில் அதனை போக்க மறைந்த தலைவர் பிறேமதாஸ தந்த நவீன ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு மீட்சியளித்ததாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – 2000 அல்லது 3000ஆம் ஆமிகளை ஒரு நாளில் ஆனையிறவில் கொன்று தொலைத்திருக்கிறோம் என்று சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட கருத்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஏன் கூறினீர்கள்?

பதில் – நமது நாட்டில் நடைபெற்றிருப்பது உள்நாட்டுப் போர். இது மூன்று தசாப்தங்களுக்கு நீண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

போர் என்பது ஒரு பொருட்காட்சியல்ல. அதன் விளைவு பல துன்பியல் சம்பவங்களை தாங்கியே இருக்கும். போரில் ஈடுபட்ட இருதரப்புகளிலும் உயிர் உடமை இழப்புக்கள் சாதாரணமானது.

தளபதியொருவர் போரை திட்டமிடுவார் வழி நடத்துவார். சரத் பொன்சேகாவுக்கும், கருணா அம்மானுக்கும் இது பொதுவானது. எனது இலக்கு வெற்றி!

அதைத் தவிர எனது கண்ணுக்கும், மனதுக்கும் வேறு எதுவும் தெரியாது. இது கருணா அம்மானுக்கு புதியதல்ல. பழக்கப்பட்டவை. இப்போது தேர்தல் காலம் நானும் வாக்குச்சேகரிப்பில் மும்முரமாக இறங்கிவிட்டேன்.

எனது ஆதரவாளர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சில விடயங்களை சொல்லித்தான் ஆக வேண்டும்.

எதிரிகளின் சொல்லாடலைக் கேட்டுக்கொண்டு ‘சும்மா’ அமர்ந்திருக்க முடியாது. அவைகளுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

வார்த்தைகள் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை நான் அறியாதவனல்ல. அத்தாக்கங்கள் ஒவ்வொரு மனிதரின் புரிதலிலும் தங்கியுள்ளது.

இதைத் தவிர இவ்விடயத்தில் நான் வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி – ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் உங்களுக்கு சார்பாக கருத்துக்கள் வெளியிடப்படுகின்றனவே?

பதில் – இந்த நாட்டில் நீண்டகாலமாக நீடித்துக் கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆதங்கம் சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்களில் ஒரு சாராருக்கும் வேரூன்றியிருந்தது.

போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் எனக்கும் முக்கிய பங்குண்டு. அவர்களுடைய ஆதங்கம் போர் முடிவுற்றதால் நிறைவேற்றியிருந்தது. அப்படியானவர்கள் என்மீது அபிமானத்தோடு இருக்கிறார்கள்.

பல சிங்கள நண்பர்கள் இக்கருத்தை என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் நான் அவர்களின் மனத்தில் இடம்பிடித்துள்ளேன்.

அப்படியானவர்கள் சுயாதீனமாக தத்தமது கருத்துக்களை வெளியிடுகிறார்கள். நீங்கள் இப்போது கூறியிருக்கும் கருத்துக்கள் ஒரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தது மாதிரியல்லவா தென்படுகிறது.

இது பற்றி என்ன கூறப்போகிறீர்கள்? நான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் அவை ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக மாட்டாது. அப்படி ஒரு விசாரணை ஒன்று எனக்கெதிராக முன்வைக்கப்படுமாயின் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

இயக்கத்தை பொறுத்தவரை ஒரு நலிவு ஏற்பட்டது. போராளிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதேபோன்று ஆயுதங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அந்த நலிவை போக்க எமக்கு மறைந்த தலைவர் பிறேமதாஸ ஆயுதங்களைத் தந்தார்.

நவீன துப்பாக்கிகளை தந்திருந்தார். அவை எங்களுக்கு மீட்சி அளித்தது. அதிலிருந்து நான் இயக்கத்தை ஒரு குறுகிய இடைவெளிக்குள் விரிவுபடுத்திக் கொண்டேன்.

என்னை விசாரிக்க விரும்பினால் அதற்கு முன்பாக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். இது ஒரு சிறு உதாரணம் தான்.

கேள்வி – நீங்கள் அரசோடு இணைந்திருந்ததால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அதாவது போராளிகள் உயிர் தப்பினார்கள் என்ற கருத்து உங்கள் வாயிலாக வெளிவந்துள்ளது இதன் உண்மையான அர்த்தம் என்ன?

பதில் – ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் இப்போது புனர்வாழ்வு பெற்று வெளிவந்துள்ளார்கள். அவர்கள் குடும்பம், பிள்ளைகள் என சமூகமயமாக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் உயிர் தப்பியவர்கள். அவர்கள் போராட்ட காலத்தில் சரணடைந்தவர்கள். இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ என்ற இரு தலைமைகளில் நீங்கள் யாரோடு அதிக உறவைக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்?

பதில் – இந்தக் கேள்வி என்னை ஒரு சிக்கலுக்கள் தள்ளிவிடப்பார்க்கிறது. ஆயினும் இதுபற்றி சில கருத்துக்களை கூறித்தான் ஆகவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ என்ற இரு தலைமைகளையும் நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பார்க்கவும் முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ ஒரு இயக்கத்தின் தளபதியை அரசியலுக்குள் உள்வாங்கி இரண்டு தடவைகளில் நியமன எம்.பி பிரதி அமைச்சர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் என்கிற பதவிகளை தந்து அரசியலில் என்னை மிளிரச் செய்தவர். அவரை நான் மறக்க முடியாது. அவர் என் அரசியல் குரு என்றுகூடக் கூறலாம்.

கேள்வி – பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்த நீங்கள் எப்படி அவரை விட்டுவிட்டு விலக முடிந்தது? நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர்களா என்பதை முதலில் கூறுங்கள்.

பதில் – தலைவரோடு நான் எப்படியிருந்தேன், அவர் என்மீது எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதற்கு என்னோடும் அவரோடும் சமகாலத்தில் பழகியவர்கள்தான் சாட்சியம் பகிர முடியும்.

எனது திறமையில் செயல்பாட்டில் போர்த்திட்டங்களை வகுப்பதில் அவருக்கு எப்போதுமே என் மீது வலுவான நம்பிக்கையிருந்தது நான் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.

கேள்வி – புலிகளின் காலத்தில் நீங்கள் மறப்போரை நடத்துவதில் வல்லவரென கூறப்பட்டது அதுபற்றி கொஞ்சமாவது சுவையாக கூறுங்கள்.

பதில் – போர் என்பது சுவை நிறைந்ததல்ல என்பதை முதலில் கூறிக் கொள்கிறேன். போர் சந்திக்கும் இழப்புக்கள் தளபதியொருவருக்கு ஒரு நாளும் சந்தோசத்தை ஏற்படுத்த மாட்டாது.

ஆயினும் ஒரு தளபதி அதைச் செய்துதான் ஆகவேண்டும். எனக்கென ஒரு வல்லமையிருந்ததென மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்றால். அது எப்படித் தோன்றியது?

எப்படி வளர்க்கப்பட்டது என்ற உண்மையையும் அதே மக்கள் அறிந்திருக்க முடியும். அதையும் அவர்கள் கூறியிருப்பார்கள் என நினைக்கிறேன். ஒன்றைமட்டும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் ஒரு விடயத்தை கையில் எடுத்தால் நான் அதுவாக மாறிவிடுவேன். அப்போது அது என்னில் நிறைந்து நிற்கும். அது வெற்றிகளை குவிக்கும்.

சில இரகசியங்களை இந்த இடத்தில் நான் சொல்லக்கூடாது. சொல்ல முடியாது. தயவு செய்து கேளாதீர்கள்.

கேள்வி – நீங்கள் அரசோடு சேர்ந்திருந்த காலத்தில் பெரிய நன்மைகளை மக்களுக்கு பெற்று கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு என்ன கூறப்போகிறீர்கள். ஒரு பாலத்தையோ அல்லது கல்விக் கல்லூரியையோ ஆரம்பிக்கவில்லை, அதைவிட வாழைச்சேனை காகித ஆலையைக்கூட புனருத்தாரணம் செய்யவில்லை இது உங்களின் பலவீனத்தை காட்டுகிறதல்லவா?

பதில் – எனது முயற்சியால் மண்முனைப் பாலம் போடப்பட்டது. கருணா அம்மானின் முழு மூச்சான பணி அதில் காட்டப்பட்டது. கிரான் கிராமத்தின் பாடசாலை மத்திய கல்லூரியாக மாற்றப்பட்டது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. ஒரே நாளில் 110 இளையுர் யுவதிகளுக்கு கல்முனை வைத்தியசாலையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

கல்முனை வைத்தியசாலையின் பணிப்பாளர் முரளீஸ்வரன் இதற்கு சாட்சி. களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் புதிய பிரம்மாண்டமான கட்டடங்கள் கருணாவின் பெயரை உச்சரிக்கும்.

வைத்தியர் சுகுணன் இதற்கு சாட்சி சொல்வார். நான் வழங்கிய உதவிகளுக்கு நான் யாரிடமும் சன்மானம் பெற்றதில்லை.

ஒரு சிலர் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள் பலர் இந்த உலகத்தில் எனது பெயரைக் கூறி வாழ்த்துகிறார்கள்.

அவர்களுக்காகவேனும் நான் சில பணிகளை தொடர்ந்து செய்து தான் ஆக வேண்டும். இதுதான் யதார்த்தம்.

கேள்வி – கருணா அம்மான் என்றால் பொதுவாக ஒரு நடுக்கம் ஏற்படும். அதற்கு என்ன காரணம்?

பதில் – இதற்கு கருணா அம்மான் நடத்திய அடிபாடுகள்தான் காரணமென நினைக்கிறேன்.

கேள்வி – ஏன் கட்சி அரசியலுக்கு வந்தீர்கள்? நியமன எம்.பி. பதவியைபெற்றுக் கொண்டு பேசாமல் இருந்திருக்கலாமே? திகாமடுல்ல உங்களை தூக்கிவிடுமா? கல்முனை பிரதேச செயலகத்திற்கு உரிய அந்தஸ்து கிடைக்குமா?

பதில் – “சும்மா இருப்பதென்பது” என்னால் முடியாத காரியம். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழர் ஐக்கிய சுகந்திர முன்னணி என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழ் மக்களின் உயர்வுக்காகவும் அவர்களுடைய தேவைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றுவதற்காகவும் பணி செய்து வருகிறேன்.

கல்முனைப் பிரதேச செயலகத்திற்கு என்னால் உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க முடியும். அண்மையில் அன்னமலை வேப்பையடி ஆஸ்பத்திரிக்கு அம்பியூலன்ஸ் வண்டியை பெற்றுக் கொடுத்தேன்.

திகாமடுல்ல எனக்கு கைகொடுக்கும், என்னைத் தூக்கி உச்சத்தில் வைக்கும் அதில் எதுவித சந்தேகமுமில்லை.

கேள்வி – நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நீங்கள் எப்படி உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வீர்கள்? தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்காவிட்டால் நீங்கள் எடுக்கும் முடிவு எப்படியிருக்கும் முடிவு நல்ல முடிவாகவே இருக்கும்.

பதில் – திகாமடுல்ல மாவட்டத் தமிழர்களின் தேவைகள் கடந்த காலத்தில் நிறைவேறவில்லை. அது அவர்களை புதியதொரு தலைமைத்துவத்தை தேட வைத்துள்ளது. நாங்கள் எமது கட்சியின் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளோம்.

அது திகாமடுல்ல, திருமலை வன்னி என்று விரிவுபட்டுப் போகிறது. நாம் சிந்திக்கும்போது எதிர்மறையாக சிந்திக்கக் கூடாது. அதற்காக அதிகம் கற்பனையில் ஈடுபடவும் கூடாது.

கருணாவுக்கென்றொரு பயணம் இருக்கிறது. அது தொடரும். அதில் வெற்றி வாய்ப்பு குவியும். அந்தப் பயணம் தமிழ் மக்களுக்கான பயணமாகவே இருக்கும். இப்போது அனேகமானவர்கள் என்னோடு கைகோர்த்துள்ளார்கள்.

இன்னும் சேருவார்கள். காலம் சாதகமாகவே இருக்கும்.

கேள்வி – “தமிழ்த் தேசியம்” புதிய அரசியலமைப்பு “பிரிபடாத நாட்டுக்குள் தமிழ் மக்களுக்குத் தீர்வு” இவை எல்லாம் சாத்தியமா? உங்களுடைய கருத்து என்ன?

பதில் – ஒன்றைமட்டும் நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீர்வு நாட்டு மக்களுக்கானது. தீர்வை நாட்டுக்குள்ளே தேடவும் வேண்டும். அடையவும் வேண்டும்.

இவை அனைத்தும் பிரதமர் மகிந்தவாலும் ஜனாதிபதி கோட்டாபயவாலும் முடியும். எல்லாம் அணுகு முறையில் தங்கியுள்ளது.

கேள்வி – நீங்கள் அறிந்த வரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருக்கிறார்களா?

பதில் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

காலமும் சூழலும் கனிந்து வருகிறது. அது வெகு தூரத்தில் இல்லை. பிரதமர் மஹிந்த 13ஐயும், 13 பிளஸ்ஸையும் தருவதாக கூறியிருந்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிநாடுகளை நம்பியிருந்தன. எதையாவது பகிரும்போது கையை நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். இது தெரியாத அரசியல் கட்சிகளிடம் நமது கதை எடுபடாது.