தமிழ் தேசிய தரப்புக்கள் அனைத்தும் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்

jaffna 1
jaffna 1

தமிழ்த் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடொன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன் போது யாழ் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திவாகரன் கருத்து தெரிவிக்கையில்

போர் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளோ, உரிமைக்கோரிக்கைகளோ, ஆகக்குறைந்தது அடிப்படைப் பிரச்சினைகளோ இன்னும் தீர்வுகள் கிட்டாது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

தென்னிலங்கை ஆட்சியாளர்கள் பௌத்த சிங்கள மேலாண்மை வாதத்தில் இருந்துகொண்டு தமிழ் பிரஜைகளை இரண்டாம் தரப் பிரஜைகளாக்கி, தமிழர் தயாகத்தின் வரலாற்றுப் பாரம்பரியங்களை அழித்து பல்லின இலங்கைத் தீவினை தனியொரு இனத்திற்கும், மதத்திற்கும் சொந்தமான நாடு என்று உருவாக்குவதற்கான திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள் என்பதற்கு அண்மையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பௌத்த துறவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதைக் கூறலாம்.

இந்த விடயத்திற்கு தீர்வுகள் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் 2015இல் ஆட்சிமாற்றத்தினை தமிழ் மக்கள் பங்களிப்புச் செய்து ஏற்படுத்தியபோதும் பல்வேறு வாக்குறுதிகளை
வழங்கிய ஆட்சியாளர்களும் அவற்றை நிறைவேற்றியதாக இல்லை. எமது உறவுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வளித்ததாகவும் இல்லை.

இவ்வாறான நிலையில் தற்போது நாட்டின் தலைமைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய இனமாகவும், தேசமாகவும் இருக்கின்றார்களென வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ்ர் தரப்புக்கள் பிரிந்து நிற்பதால் எதனையும் சாதித்து விட முடியாது.

ஆகவே ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு உட்பட்டு எமது பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கவல்ல விடயங்களை பொதுப்படையாக வரைந்து அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றிணைந்து முன்மொழிந்து உறுதிப்பாட்டை பெறுவதே பொருத்தமான செயற்பாடாக இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தவறவிடாது பயன்படுத்துவதே இனவிடுதலைக்கான பயணத்தில் முக்கிய செயற்பாடாக இருக்கும் என்றார்.