இறுதிப் பேச்சுக்கு தயாராகும் மாணவர்கள்!

01 1 4
01 1 4

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடத்தே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கமைய நேற்றைய சந்திப்பிலும் கட்சிகளிடையே சில விடயங்களில் இணக்கப்பாடுகள் காணப்பட்டாலும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தினால் கொண்டு வரப்பட்டிருக்கின்ற இடைக்கால அறிக்கையை ஏற்பதா நிராகரிப்பதா என்பதில் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு எட்டப்படாததால் இணக்கப்பாடின்றி கூட்டம் முடிவடைந்தது.

இந் நிலையில் இவ் விடயத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் நாளையதினம் (இன்று) இறுதிக் கூட்டம் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த முடிவை எடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ் . பல்கலைக் கழகத்துக்கு அண்மையிலுள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பானது சுமார் ஐந்து மணித்தியாலங்கள் இடம்பெற்றிருந்த போதும் இணக்கப்பாடுகளின்றியே முடிவடைந்தது.

இக் கூட்டம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிகையில்…

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு இன்று நான்காவது தடவையாகவும் பேசி எல்லோரும் இணங்கி ஒரு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் எல்லோரும் கையொப்பம் இடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்ததற்கமைய எமக்குள் இணக்கப்பாடு எட்டுவதில் சுமூகமான நிலை தோன்றுவதாகக் காணப்பட்டாலும் இன்று இணக்கப்பாடு எட்டுவதற்கான சூழல் கணியவில்லை.

இதன் காரணமாக இக் கூட்டத்தை நாளை மாலை (இன்று) வரை பிற்போட்டுள்ளோம். இது சம்மந்தமாக நாளை (இன்று) கூடி ஒரு இணக்கப்பாட்டுக்கு கட்சிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கலந்துரையாடல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எமக்கிருக்கின்ற சாபக்கேடு தேசியப் பாதையில் பயணிக்கின்றோம் தேசியத்திற்காக பாடுபடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டடிருக்கின்ற நிலையிலும் கட்சி அடிப்படையில் நாம் பிரிந்து நின்று எமது பேரம் பேசும் சக்தியினை சிதறிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதன் காரணமாகத் தான் எமது கோரிக்கைகளை தென்னிலங்கை கட்சிகளும் கணக்கெடுக்காமல் இருக்கின்றன. நாம் பல கட்சிகளாகப் பிரிந்து நின்று எமது பேரம் பேசும் சக்தியை சிதறடித்து விட்டோம். தொடர்ச்சியாகவும் அப்படியாக பிரிந்து இருப்போமேயானால் எமது தாயக பூமியில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்களையோ அல்லது காணி அபகரிப்புக்களையோ அல்லது எமது இனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளையோ எம்மால்
தடுக்க முடியாத சூழல் ஏற்படும்.

அவ்வாறு நிலைமைகள் இருக்கின்ற போது நாம் வெறுமனே வாய் வார்த்தைகளால் தொடர்ச்சியாக இப்படியே கோசங்களை எழுப்பிக் கொண்டு வெறுமனே தேர்தல் காலங்களில் மட்டும் இவ்விடயங்களைத் தூக்கிப் பிடித்துவிட்டு ஒதுங்கியிருப்போமேயானால் எமக்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டு நாம் இலங்கைத் தீவில் அநாதையாக்கப்படுகின்ற நிர்க்கதியான சூழல் ஏற்படும். ஆகவே தமிழ்க் கட்சிகள் ஒரு ஒருமித்த முடிவை எடுக்க வேண்டியது அவசியமானது. அதற்கமைய நாளைய (இன்று) கலந்துரையாடலில் ஒருமித்த முடிவொன்றிற்கு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.

கேள்வி – ஏந்த விடயங்களில் ஒருமைப்பாடு எட்டப்படவில்லை. என்ன காரணத்தில் அல்லது என்ன விடயத்தில் இணக்கப்பாடு
காணப்படவில்லை?

அரசியல் தீர்வு விடயங்களில் கட்சிகளுக்கிடையில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. ஆனாலும் நல்லாட்சிஅரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதா இல்லையா என்பதில் கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் தான் இன்று அந்தக் கலந்துரையாடல் சுமூகமாக நிறைவடைய முடியாத சூழல் காணப்படுகிறது. ஆகவே இது சம்மந்தமாக நாளையதினம் இடம்பெறும் கலந்துரையாடலில் இறுக்கமான முடிவை ஒருமித்து எடுப்போம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

கேள்வி – கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளில் அந்த இடைக்கால அறிக்கையை நீங்கள் தயாரிக்கும் ஆவணத்தில் இணைத்துக் கொள்வதில் அல்லது இணைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் அதிக கட்சிகள் ஏற்கின்றனவா அல்லது அதிக கட்சிகள் எதிர்க்கின்றனவா?

இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் சமஷ்டி முறையிலான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் கட்சிகளுக்கிடையில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. ஆனால் இடைக்கால அறிக்கையினை நிராகரிப்பதா என்பதில் சில கட்சிகளிடத்தே
உடண்பாடு இல்லை. ஆகவே அதை நீக்குவோம் என்றால் அதனை நீக்குவதற்கும் ஒரு சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

ஆகையினால் அந்த விடயத்தை எவ்வாறு கையாளுவது என்பதில் நீண்ட இழுபறி காணப்படுகிறது. அதனால் தொடர்ச்சியாக அந்த விடயம் குறித்த நாளை (இன்று) கலந்துரையாடுவதென்றும் அதில் சுமூகமான நிலைப்பாட்டை எடுப்பதென்றும் இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கு உண்மையில் அனைத்துக் கட்சிகளிடத்திலும் இனப்பிரச்சனைக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்பதில் உறுதியாக இருந்து கொண்டிருந்தாலும் அந்த இடைக்கால அறிக்கை விவகாரத்தில் மட்டும் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது எமது இனத்திற்கு சரியான ஒரு தீர்வினை நாம் பெற்றுக் கொடுப்போம் என்றிருப்பதில் ஒரு பின்னடைவாகத் தான் இருக்குமென்று நாம் நம்புகின்றோம்.

ஏனென்றால் எல்லோரையும் பொறுத்த வரையில் சமஷ்டி சமஷ்டி என்று தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் நாம் தெரிவித்து வருகின்றோம் அதைத் தான் மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப் போகின்றோம் என்றும் சொல்லுகின்றோம். இப்பொழுது தேர்தலை முன்னிட்டு தயாரிக்கின்ற இந்த அறிக்கை விடயத்திலும் சமஷ்டி அடிப்படையில் தீர்வு வர வேண்டுமென்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள்.

ஆனால் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பது என்பதில் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த நிலைப்பாடு காண முடியாமல் இருக்கின்றது என்கின்ற பொழுது தான் எமக்கு அதுவொரு மனவேதனையாகக் காணப்படுகிறது. அது என்னவென்றால் கட்சிகள் ஏன் அத்தகைய ஒரு இரட்டை நிலைப்பாட்டுத் தன்மையை எடுக்கின்றார்கள் என்பது தான் மன வேதனையாக இருக்கிறது.

கேள்வி – ஆறு தேசிய கட்சிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதற்கு அதிகமான கட்சிகள் ஆதரவா அல்லது அதிகமான கட்சிகள் எதிர்ப்பா?

இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வொன்றை நாம் அடைய வேண்மன்று எதிர்பார்க்கிறோம். ஆகவே இங்கு இந்த விடயங்களைத் தெரிவித்து நாம் எடுக்கும் நடவடிக்கைககளைக் குழப்புவதாக அமையக் கூடாதென்பதால் நாளையும் ஆராய்ந்து ஒரு முடிவெடுத்து அதன் பின்னர் இந்த விடயங்கள் குறித்து அறிவிப்போம். இந்த முயற்சி வெற்றியளிக்குமென்று நம்புகின்ற காரணத்தினால் அது சம்மந்தமான விடங்களைத் தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள விரும்புகிறோம்.

கேள்வி – இறுதி நிலைப்பாடு என்ன?

இங்கு நாம் கலந்தரையாடி ஒரு இணக்கப்பாடான முடிவை எடுத்து அதில் அவர்களின் கையொப்பத்தைப் பெற்று அதில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறதென்பதைப் பகிரங்கப்படுத்தி தொடர்ச்சியாக ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோடு இது சம்மந்தமாக பேரம் பேசல்களில் ஈடுபடுவோம்.

இத்தகைய விடயத்தில் ஒரு சில கட்சிகள் உடன்பட மறுத்தால் அதற்காக இந்த முயற்சியை முற்று முழுதாக கைவிட்டுவிட்டுச் செல்ல முடியாது. நாம் தயாரிக்கின்ற இறுதி வடிவத்தை கட்சிகளுக்கு அனுப்பி அதற்கு உடன்படுகின்ற கட்சிகளின் ஒப்பத்தோடு நாளையதினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஐனாதிபதித் தேர்தலுக்கான கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை நாம் வெளியிடுவோம். அந்த ஆவணத்தை முன்வைத்து ஐனாதிபதி வேட்பாளர்களுடன் பேரம் பேசல்கள் என்பது இடம்பெறும்.

ஒருசில கட்சிகள் உடன்பட மறுக்கின்ற காரணத்தினால் இனத்தின் இருப்பையும் இனத்தின் விடுதலையையும் நாம் விலைபேசிவிட முடியாது. ஆகவே நான்கு தடவைகள் நடாத்தப்பட்ட இக் கூட்டத்திற்கு வெற்றிகரமான முடிவொன்று தேவை. நாங்கள் இதனை வெறுமனே கிடப்பில் போட்டுவிட முடியாது.

மக்கள் மத்தியில் இத்தகைய தமிழ்த் தேசிய ஆறு கட்சிகள் இருக்கின்றன என்றும் அவர்கள் எத்தகைய முடிவை வெளியிடப் போகின்றன என்றுமே மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நாம் இதனை வெறுமனே தோல்வியில் முடிவடைந்த ஒன்றாக விட்டுவிட்டுச் செல்ல முடியாது.

ஆகவே நாளையதினம் (இன்று) இடம்பெறும் கூட்டத்தில் ஒரு இறுக்கமான முடிவெடுக்கப்பட்டு இதில் கட்சிகள் ஒப்பமிட்டதன் பின்னர் அந்த ஆவணத்தை வெளியிடத் தீர்மானித்திருக்கின்றோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்ந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம், ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க. அருந்தவபாலன் ஆகியோரும் மதகுருமார்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் எனபல் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.