பிரபாகரன் கட்டடம் கேட்கவில்லை; சுயாட்சிக்கே போராடினார்: முன்னாள் அமைச்சர் ஹரீஸ்!

Dy. Harees
Dy. Harees

நிலவுரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களையும் இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வு வியாழக்கிழமை (16) இரவு அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது,

அபிவிருத்தி குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பதை விட நிலவுரிமையை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதே எனது நோக்கம். எங்களால் இயன்ற அபிவிருத்திகள் கடந்த காலங்களில் செய்யப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகள் தான் அபிவிருத்தி எதுவும் செய்யவில்லை எம்மால் முன்னெடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு கோசத்திற்காக எதுவும் நடக்கவில்லை என்று அரசியல் எதிரிகள் தெரிவித்து வருகின்றார்கள். ஒரு பொய்யை பலமுறை சொல்வதனால் உண்மை போன்ற விம்பத்தை மக்கள் மத்தியில் அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

என்னுடைய முழுக்கவனமும் நிலவுரிமை விடயத்தில் தான் உள்ளது. இந்த நிலவுரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனை முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களையும் இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும். அபிவிருத்தி தொடர்பில் குற்றஞ்சுமத்துபவர்கள் இந்த நிலவுரிமை விடயத்தில் அக்கறை செலுத்துவதில்லை.

தற்போது கருணா அம்மான், கோடீஸ்வரன் என்போர் என்னை தமிழ் விரோத சக்தியாக காட்ட முற்பட்டுள்ளார்கள். இதனை அறியாத இவர்கள் அபிவிருத்தி என்ற விடயத்தை காரணம் காட்டி திசை திருப்ப முயற்சிக்கின்றார்கள். தமிழ் தலைமைகள் கூட இன்று வரை அபிவிருத்தியைநோக்கி போராடவில்லை. பிரபாகரன் கூட தனது மக்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தை பெற்று கொடுப்பதிலேயே குறியாக இருந்தார். சம்மந்தன் கூட இந்த தள்ளாடாத வயதில் கல்முனையில் ஒரு கட்டடம் வேணும் மட்டக்களப்பில் பாரிய நகரம் ஒன்று வேண்டும் என பேசவில்லை. அவர்கள் தங்களை தாங்கள் ஆளுகின்ற சுயாட்சியை பெற்றுக்கொள்ள உச்சக்கட்ட அரசியலை செய்கின்ற போது எங்களுடைய சமூக தலைவர்கள் எமது மக்களை வேறு திசை நோக்கி பயணிக்க செய்கின்ற ஆபத்தான விடயங்களை நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

காரைதீவு பிரதேச சபை சுயேச்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம் பஸ்மீர் இன்று உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தமை எமது அணிக்கு மேலும் பலம் சேர்க்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் என்ற வகையில் எனக்கு ஒரு பலமாக இதை கருதுகின்றேன். இவ்வாறு எம்முடன் இணைந்துள்ள உறுப்பினர் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தல் கேட்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காகவும் எனது வெற்றிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கின்ற நேரத்தில் இவ்வாறான பலம் மிக்க இளைஞர்கள் எம்முடன் இணைவது எம்மை சவாலுக்கு உட்படுத்தும் தரப்பினருக்கு ஒரு மரண அடியாகும் என தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.

மாளிக்கைக்காடு மேற்கு வட்டாரத்தில் தோடம்பழ சுயேச்சை குழு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற குறித்த உறுப்பினர் ஏனைய தோடம்பழ சுயேச்சை குழு நிர்வாக உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தன்னை புறக்கணிப்பு செய்வதாகவும் மற்றும் பல்வேறுபட்ட செயற்பாடுகள் காரணமாகவே தான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தாக குறிப்பிட்டு இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.