முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் கையேந்த வேண்டிய தேவை இல்லை; ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர்

vlcsnap 2020 07 17 14h03m31s333
vlcsnap 2020 07 17 14h03m31s333

முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் கையேந்த வேண்டிய தேவை இல்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது தமழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவுபடுத்தலை அவர் ஊடகங்களிற்கு வழங்கியபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். அந்த வகையில் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி வெல்ல வைக்கின்ற போது தற்போது அரசினால் ஏற்படுத்தப்படும் தற்கால நிலையிலிருந்து விடுபட முடியும். எமக்கான உரிமைகளை அரசுதான் தர மறுக்கின்றது. இவ்வாறான நிலையில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதே. அவர்களது செயற்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா என செய்தியாளர் வினவியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக்கொண்ட அத்தனை முயற்சிகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் அரசு தர மறுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் முயற்சி எடுத்தார்கள். ஆனால் அரசே தருவதற்கு மறுத்தது. எனவே இவ்வாறு செயற்படும் அரசுக்கு எதிரான குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் தமிழரசு கட்சிக்கும் நீண்டகாலம் தொடர்பு உள்ளது. விடுதலைப்புலிகளே தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை ஆதரித்திருந்தனர் என தெரிவிக்கையில், செய்தியாளர் குறுக்கிட்டு 
தமிழீழ விடுதலைப்புலிகள் உருவெடுத்த போது தமிழரசு கட்சி இருந்திருக்கவில்லை. அப்போது தமழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது. இவ்வாறான நிலையில் எவ்வாறு இவ்வாறான கருத்தினை தெரிவிப்பீர்கள் என வினவியபோது

அப்போது தமிழரசு கட்சி இருக்கவில்லைதான் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களே தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்தனர். அப்போதுதான் ஈழ கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது என்ற விடயத்தினை மீண்டும் பதிவு செய்திருந்தார்.
முன்னாள் போராளிகளிற்கான தேவைகள் சந்தித்து கொடுக்கப்படவில்லை எனவும், அவர்களின் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மாற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகளிற்கு மலசலகூடத்தையேனும் அமைத்து கொடுக்க முடியவில்லையே என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குற்றம் சாட்டுகின்றனரே என எமது செய்தியாளர் அவரிடம் வினவினார்.

பதிலளித்த கதிர், முன்னாள் போராளிகளிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவ வேண்டும் என்ற தேவை இல்லை. அவர்கள் இன்றும் குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர் என்பது உண்மை. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களிற்கு உதவ வேண்டும் என குறிப்பிடுவது பொருத்தமற்றது என குறிப்பிடுகையில்,
குறுக்கிட்டசெய்தியாளர், அவ்வாறெனில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திலும், குடும்ப பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தமது தேர்தல் விஞஞாபனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டிருந்த நிலையில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது தவறா என வினவியிருந்தார்.


இதன்போது பதிலளித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்கு அரசு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இவ்வாறான நிலையில் முன்னாள் போராளிகள் என கூறிக்கொள்ளும் சிலரை உடைத்து இவ்வாறான கருத்துக்களை கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையு்ம, முன்னாள் போராளிகளின் கட்டமைப்பையும் பிரித்தாள நினைக்கின்றது. இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்க முடியாது என்றதான கருத்தினை அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் செயலாளர் கண்ணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் போராளிகளிற்கு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் இன்றைய ஊடக சந்திப்பின் ஊடாக கருத்துக்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.