பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து இன்று அறிவிப்பு!

man 3653346 1280

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவித்தல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2020 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 7ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக பரீட்சை பிற்போடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து,  கொழும்பு மற்றும் வெளிப்பிரதேச மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் இதுதொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, பரீட்சையை நடத்துவது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.

எனினும் அன்றைய தினமும் பரீட்சை திகதி குறித்து அறிவிக்கப்படாத நிலையில், இன்றைய கலந்துரையாடலின் பின்னர் பரீட்சை திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த வாரத்தில் 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

ஏனைய தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் வரும் முதலாவது திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேநேரம், ராஜாங்கனை மற்றும் வெலிகந்தை கல்வி வலயத்தில் உள்ள எந்தவொரு பாடசாலையும் ஒக்ஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.