கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு 20 ஆசனங்களை கேட்கிறார்கள்!

Sivasakthy Ananthan
Sivasakthy Ananthan

சர்வதேசத்துடன் பேசுவதற்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிட்டுள்ள கூட்டமைப்பு மீண்டும் 20ஆசனங்களை கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் போரில் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அத்துடன் நீண்டகாலமாக வடமாகாணமானது அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். 50ஆயிரம்
குடும்பங்களிற்கு வீடுகள் தேவையாக இருக்கின்றது.

எனவே அவற்றை பூர்த்தி செய்வதற்கு வடமாகாணசபைக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் வடபகுதிக்கு விசேடமான நிதி ஒதுக்கீட்டினை செய்யவேண்டிய தேவையைம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது. எனவே இவற்றை செய்விப்பதற்கு ஒரு உறுதியான தலைமைத்துவம் தமிழர்களிற்கு வேண்டும்.

அந்தவகையில் மூன்றாம் தரப்பின் அனுசரணையுடன்  அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை நான்கு கட்சிகளின் ஒன்றிணைவில் போட்டியிடும் தமிழ்மக்கள் தேசியகூட்டணி நிச்சயம் எடுக்கும்.

இந்தவிடயங்களிற்கான தீர்வுகளை காண்பதற்காகவே கடந்தமுறை இடம்பெற்ற தேர்தலில் தமிழ் கூட்டமைப்பிற்கு 15 ஆசனங்களை மக்கள் வழங்கியிருந்தார்கள். அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்துடன் தேனும் பாலுமாக இருந்தார்கள். அந்த காலப்பகுதிகளில் இந்தபிரச்சினைகளை தீர்ப்பதற்கான பல சந்தர்பங்கள் இருந்தது. எனினும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.

தமிழ்மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசத்துடன் பேசுவதற்கு 20 ஆசனங்களை மக்கள் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் கூறுகின்றார். ஏற்கனவே மக்கள் வழங்கிய ஆணையின் படி சர்வதேச சமூகத்துடன் பேசவேண்டிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல் அரசுக்கு காலநீடிப்பை வழங்கி அனைத்தையும் நீர்த்து போக செய்தவர்கள் தற்போது அதிக ஆசனங்களை மீண்டும் கேட்கின்றனர்.

இந்த நிலையிலேயே நாம் புதியகூட்டணியில் களம் இறங்கியுள்ளோம். அதற்கான மக்கள் ஆதரவு எமக்கு தேவையாக இருக்கின்றது.அரசு சார்பான கட்சிகளிற்கும், அரசாங்கத்திற்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குபவர்களிற்கு தமிழ்மக்கள் வாக்கினை வழங்க வேண்டிய தேவையில்லை. சிங்கள் மக்கள் தமது பிரதிநிதிகளையும், முஸ்லீம் மக்கள் முஸ்லீம் பிரதிநிதிகளையும் தமிழ்மக்கள் தமிழ் பிரதிநிதிகளையும் தேர்வு செய்ய முடியும்.

எனவே தமிழ்மக்கள் கடந்த 20 வருடங்களாக ஆதரவு வழங்கி வந்த அந்தகட்சியையும் சின்னத்தையும் முற்றாக நிராகரித்து எம்மை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுகொள்வதுடன், தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு முதுகெலும்புள்ள இராஜதந்திரமாக செயற்படக்கூடிய அரசியல் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.