கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பற்றிய விபரங்கள்

02 8

இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,730 ஆகும். நேற்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு வெளிநாட்டவர் உட்பட 671 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் மேலும் 94 பேர் தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் உள்ளனர்.

இன்று புதன்கிழமை (22) காலை 6 மணி நிலவரப்படி, கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து 561 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

இதில் 451 கைதிகள், 63 ஊழியர்கள், ஐந்து விருந்தினர் பணியாளர்கள், மற்றும் கந்தக்காடு தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 42 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கட்டார், டோஹாவிலிருந்து இன்று காலை 30 பேர், QR-668 விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு படைகளால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 257 நபர்கள் இன்று விடுவிக்கப்படுவார்கள்.

இதுவரை 25,074 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்து வீடு திரும்பியுள்ளனர். 5,222 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நேற்று 1,100 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை 141,515 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.