தமிழர் வழி வன்முறையெனில் பதிலடியும் வன்முறையேதான்!

.jpg
.jpg
  • கறுப்பு ஜூலையே அதற்குச் சாட்சி என்று
    எக்காளமிடுகிறார் ஓமல்பே சோபித தேரர்

“தேசத்தைக் காத்த இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கைவைக்க வேண்டி வந்தது. தமிழர்கள் வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜுலை சாட்சி.”

  • இவ்வாறு தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜுலைக் கலவரத்தின் 37ஆவது நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“1983ஆம் ஆண்டு அரங்கேறிய கறுப்பு ஜுலை இனக்கலவரத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுமே முழுப்பொறுப்பு.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இராணுவத்தினரைக் குறிவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாகவே கொழும்பில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது.

ஆனால், இந்தக் கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசு அன்று தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

இந்தக் கலவரத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மோசமான செயலாலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பொறுப்பற்ற நடவடிக்கையினாலுமே கலவரம் மூண்டது. இதுதான் உண்மை.

சிங்கள மக்கள் மீது எவரும் பழியைப் போட முடியாது. தேசத்தைக் காத்த இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கைவைக்க வேண்டி வந்தது.

தமிழர்களுக்காக அன்றும் ஒழுங்கான தலைமை இருக்கவில்லை; இன்றும் ஒழுங்கான தலைமை இல்லை.

தமிழர்கள் வன்முறையை நாடினால் வன்முறைதான் பதில் என்பதற்குக் கறுப்பு ஜுலை சாட்சி. அப்படியான ஒரு நிலைமை நாட்டில் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை” – என தெரிவித்துள்ளார்.