அரசாங்கம் எந்தவித இணக்கமும் எட்டவில்லை!

Bandula Gunawardena
Bandula Gunawardena

அமெரிக்கவும் எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து அரசாங்கம் எந்தவித இணக்கமும் எட்டவில்லை. அரசாங்கம் ஆரம்பத்தில் கூறிய நிலைப்பாட்டில் இப்போதும் உள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறியுள்ளார்.

எம்.சி.சியை கைச்சாத்திட அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும், அவ்வாறு செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கையை பாராளுமன்ற அனுமதியின்றி செய்துகொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்த காரணிகளில் உண்மைத்தன்மை என்னவென்று இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன கூறியதாவது,

அது பொய். அவ்வாறு எந்தவித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. நாட்டின் இறைமைக்கும் நாட்டின் சட்டத்திற்கும் முரணான விதத்தில் செயற்படும் எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்காது.

வெள்ளைவானில் கடத்தியவர்களை முதலைகளுக்கு உணவாக போடா ஜனாதிபதி பணித்தார் என கூறியவர்கள் தானே இவர்கள். இப்போது தேர்தல் காலத்தில் ஒவ்வொரு பொய்களை கூறிக்கொண்டு அரசாங்கத்தில் வீழ்த்த முயற்சிக்கும் முயற்சியே இவையெல்லாம். ஆனால் இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை” என கூறியுள்ளார்.