அவளுக்கு ஒரு வாக்கு வேட்பாளர்கள் அறிமுகம்; கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு

x 080

அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கான வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பணி மற்றும் வேட்பாளர் அறிமுகம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

மன்னார் மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஷீரி சரோர் தலைமையில் இடம்பெற்றது. . குறித்த பிரச்சார பணி மற்றும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த க.ஞானகுணேஸ்வரி பி.உமாச்சந்திரா ஆர்.பவதாரணி மற்றும் அ.மீரா ஆகியோருடன் பல்வேறு பொது அமைப்புக்களைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு பெண்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். எவ்வாறு வாக்களிக்க வேண்டும் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. மேலும் பெண்களால் தான் பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடக்கம் குறித்துபேச முடியும். எந்தக் கட்சி என்று நாம் குறிப்பிடவில்லை. கட்சிகளுக்கு அப்பால் ஆளுமையான கெட்டித்தனமுடைய பெண்களை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை மட்டும் பெண்களுக்கு வழங்குவதனூடாக பெண்பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கச் செய்வோம். “” இதனைத்தான் நாம் அனைத்து பெண்களிடமும் கோரி நிற்கின்றோம். எனத் தெரிவித்தனர்.

மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வவுனியா யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தெருக்களில் நாடகங்களுடன் வீடுகள் தோறும் செல்லும் இவர்கள் பெண் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

குறித்த தெருவெளி நாடகங்ளை மகாலட்சுமி குருசாந்தன் தலைமையிலான மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் செயல்மமுனைப்புடன் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வல்லமை சமூக செயற்பாட்டு இயக்கத்தின் பெண் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 26.07.2020 காலை 9மணிக்கு யாழ் தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.