வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் வெனிசுவேலாவுக்கான விஜயம்

venizuvela
venizuvela

ஊடக வெளியீடு

அண்மைய உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க அவர்களுக்கு வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வாழ்த்துக்களை பரிமாறினார்.

இலங்கை மற்றும் வெனிசுவேலாவிற்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை புதுப்பித்து ஊக்குவிக்கும் நோக்கில், வெனிசுவேலாவின் வெளிவிவகார துணை அமைச்சர் ரூபன் டரியோ மொலினா அவர்களின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க 2019 அக்டோபர் 03 முதல் 06 வரை வெனிசுவேலா பொலிவரியன் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, வசந்த சேனநாயக்க அவர்கள் வெனிசுவேலாவின் துணை அமைச்சருடன் அக்டோபர் 04 ஆம் திகதி ‘அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே’ மஞ்சள் மாளிகையில் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், இதன் போது, இரண்டு நாடுகளிதும் இருதரப்பு உறவுகள் குறித்த முந்தைய பேச்சுவார்த்தைகளை அவர்கள் தொடர்ந்தனர்.

இருதரப்பு உறவுகள் மற்றும் விவசாயம், ஆடை உற்பத்தி, விளையாட்டு, சுற்றுலா போன்ற ஒத்துழைப்பின் புதிய துறைகள் குறித்து அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, வழக்கமான அரசியல் ஆலோசனைகளுக்கான ஒரு பொறிமுறையை நிறுவுவதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பயணத்தை எளிதாக்குவதற்கும், மக்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கும், விசா தேவைப்பாடுகளுக்கு விலக்கு அளிப்பதற்கான இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்தும் ஒப்புக் கொள்ளப்பட்டது. உயர் மட்ட விஜயங்கள் மற்றும் வணிக தூதுக்குழுக்களின் பரிமாற்றம் மூலம் ஈடுபாடுகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வெனிசுவேலா அமைச்சர் வலியுறுத்தினார்.

ஹொண்டுராஸ், டொமினிக்கன் குடியரசு, ஹைட்டி போன்ற நாடுகளில் ஈடுபட்டுள்ளதைப் போல, வெனிசுவேலாவுக்கும் இலங்கை தனது ஆடைத் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

வெனிசுவேலாவின் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான மக்கள் சக்தி அமைச்சர் பெலிக்ஸ் பிளாசென்சியாவுடனும் இராஜாங்க அமைச்சர் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க விளக்கினார்.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுக்கான வெனிசுவேலாவின் பொறுப்புகளை வெனிசுவேலா அமைச்சர் விளக்கினார். தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக இலங்கையின் இரத்தினக்கல் நிபுணர்களை அழைத்து வருவதன் மூலம், வெனிசுவேலாவில் இரத்தினக்கல் தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கையின் விருப்பத்தை இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வெனிசுவேலாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான மக்கள் சக்தி அமைச்சர் பெட்ரோ இன்பான்ட்டே அவர்களுடனும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க சந்திப்பொன்றில் ஈடுபட்டதுடன், ஒத்துழைப்பின் புதிய பகுதிகள் குறித்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பிரதி விளையாட்டு அமைச்சர், பிரதி இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் பல அதிகாரிகள் அமைச்சருடன் இதன்போது உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இளைஞர் பரிமாற்ற திட்டமொன்றை இராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க முன்மொழிந்ததுடன், இலங்கை இத்தகைய திட்டங்களை பல நாடுகளுடன் இணைந்து முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார். இளைஞர் தூதுக்குழுவினர் பரிமாற்றம் குறித்த வரைவுத் திட்டத்தை அனுப்புவதற்கு வெனிசுவேலா தரப்பு ஒப்புக்கொண்டது.

இந்த விஜயத்தின் போது, இராஜாங்க அமைச்சர் சேனநாயக்க வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ அவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகளை இரு நாடுகளும் ஆராய வேண்டும் என ஜனாதிபதி மதுரோ பரிந்துரைத்தார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியுடன் உடன்பட்டதுடன், பொலிவேரிய வெனிசுவேலா குடியரசின் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அதன் மக்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவுடன் வெனிசுவேலாவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள கியூபாவிற்கான இலங்கைத் தூதுவர் ஏ.எல். ரத்னபால இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
15 ஒக்டோபர் 2019.