நல்லூரில் ஒரு வாரத்திற்கு அதிகளவான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுவார்கள்

30729810 1656835171071513 7432752192072712192 n
30729810 1656835171071513 7432752192072712192 n

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவற்துறைத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருடா வருடம் காவற்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து ஆலய வெளி வீதிக்கு வெளிப்புறமாக இராணுவத்தினர் சிலரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கோவிட் 19 நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் காவற்துறையினர். கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் ஓகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் காவற்துறையினர் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

அதனால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர் மூன்றில் இரண்டு பகுதியினர் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.