உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

e3a0b0280e350eb9f1e54de284c6a7ed XL

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 63 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் சகோதரி, சீயோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சீயோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் உட்பட 4 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 68 பேரின் வழக்குகள் நேற்றையதினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஏனைய 63 பேரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.