நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்!

unnamed 6 3
unnamed 6 3

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது.

இந்த மழை காரணமாக மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை காசல்ரீ, கெனியோன், நவலக்ஸபாக, பொல்பிட்டிய உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகு வேகமாக அதிகரித்து வருவதாக மின்சாரசபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்னர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

இதனால் மண் திட்டுக்கு அருகாமையிலும் மலைகளுக்கு அருகாமையிலும் கடும் காற்று வீசும் போது மரங்களுக்கு அருகாமையில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதே நேரம் மழையுடன் ஹட்டன் கொழும்பு வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, குயில்வத்தை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனி மூட்டமும் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாகத் தனது வாகனங்களைச் செலுத்துமாறும் பனி மூட்டம் காணப்படும் இடங்களில் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு தமக்குரிய பக்கத்தில் வாகனங்களைச் செலுத்துவதன் மூலம் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம் எனப் போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.