இலங்கை பாராளுமன்றத்திற்கு முதற்தடவையாக செல்லும் புதிய உறுப்பினர்கள்

parlia

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவுகளின் படி பல புதிய வேட்பாளர்கள் அதிகளவிலான விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்ட நிபுண ரணவக்க அந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களான கம்பாஹாவை பிரதிநிதித்துவப்படுத்திய வைத்தியர் நாலகா கோதஹேவ, மொனராகலையில் போட்டியிட்ட ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ச, நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமனின் மகன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விருப்புவாக்குகளை அதிகம் பெற்று முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சாணக்கியன் ராகுல் ராஜபுத்திரனும் அதிக விருப்புவாக்குகளை பெற்று முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.