பொது இணக்கப்பாடு ஒற்றையாட்சியினுள் முடக்கும் நிகழ்வு- கஜேந்திரகுமார்

gajendrakumar
gajendrakumar

பொது உடன்படிக்கையில் 5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டமையானது இலங்கையினை ஒற்றையாட்சியினுள் முடக்கும் நிகழ்வாகவும் அவர்களை மேற்கு நாட்டு முகவர்கள் இயக்குவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்.கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஐனாதிபதி தேர்தல் சம்மந்தமாக தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் ஆறு கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்தது. அதில் ஐந்து கட்சிகள் ஒண்றிணைந்து ஒரு பொது அறிக்கையை தயாரித்து பொது ஆவணமாக வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த அறிக்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகிய நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளும் அதன் இறுதி வடிவத்தில் வந்த விடயங்களும் எங்களின் முயற்சியால் வந்தது என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அப்படியிருந்தும் எங்களுடைய அமைப்பு அந்த அறிக்கையில் கையொப்பத்தை வைக்க முடியாத நிலைமை உருவாகுவதற்கான காரணங்களும் இருந்தது. இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே மக்களுக்குத் வெளிப்படுத்தியும் இருக்கின்றோம். குறிப்பாக ஐந்து கட்சிகள் கைச்சாத்திட்ட அறிக்கையானது கொள்கையளவில் வெளியிடப்பட்ட கருத்துக்காளாக இருக்கிறதே தவிர நடைமுறையில் அவர்கள் பிழையான பாதையில் போகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

ஆகவே தவறான பாதையில் போவதைத் தடுக்கக் கூடிய வகையிலும் இந்தக் கொள்கைகளுக்கு அதாவது அவர்களே கைச்சாத்திட்ட 13 அம்ச கோட்பாடுகளுக்கு நேர்மாறாக இருக்கக் கூடிய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று நாங்கள் கேட்ட போதும் அதனை அவர்கள் மறுத்து எங்களை உண்மையில் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேற்றும் கோணத்தில் நடந்து கொண்டார்கள். அதனால் அந்த உடன்பாட்டில் நாங்கள் கையொப்பத்தை இடமுடியாத நிலைமை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட அந்த ஐந்து கட்சிகளும் இதுவரைக்கும் தமிழர்களுடைய அடிப்படைக் கோட்பாட்டை நிராகரித்து வந்த தரப்புக்கள் தான். குறிப்பாக இந்தியா விரும்பாத எதையுமே தாங்களும் செய்யத் தயாரில்லாத இந்தத் தரப்புக்கள் கடந்த திங்கட்கிழமை தமிழர்களுடைய அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்று அதனை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்றால் அல்லது கொள்கையளவில் ஒரு ஆவணத்தில் தங்கள் கையொப்பத்தை இட்டிருக்கின்றார்கள் என்றால் அந்தச் செய்தி வெளியில் வர வேண்டுமென்பதற்காக இந்தியாவினால் திட்டமிட்டு அவர்களுக்கு கொடுத்த ஆலோசனையின் அடிப்படையில் தான்.

ஏனெனில் வரப்போகின்ற ஐனாதிபதித் தேர்தல் வெறுமனே சஐித் பிரேமதாசா மற்றும் கோத்தபாய ராஐபக்சவிற்கும் இடையிலே நடக்கின்ற தேர்தல் அல்ல என்பதை நாங்கள் மிகத் தெளிவாக பல தடவைகள் கூறியிருக்கின்றோம். இந்த நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் போட்டித் தன்மை என்பது வெறுமனே இந்த நாட்டில் இருக்கக் கூடிய கட்சிகளுக்கிடையே நடக்கின்ற போட்டித் தன்மை அல்ல. மாறாக ஒவ்வொரு கட்சிக்கு பின்னாள் இருக்கக் கூடிய சர்வதேச வல்லரசுகளின் போட்டி தான் நடக்கிறது.

இந்தத் தேர்தலும் அதே போன்று ஒரு பக்கம் சீனாவும் சீனா சார்ந்த நாடுகளுகளும் இணைந்து கோத்தபாய ராஐபக்சவின் பின்னால் இருக்கக் கூடிய தரப்புக்களாகவும் அதே போன்று இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் சஐித் பிரேமதாசாவிற்கு பின்னால் இருக்கக் கூடிய தரப்புக்காளாகவும் இருக்கின்றன. இது தான் இங்கு உண்மையில் நடக்கின்ற சர்வதேசப் போட்டி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அந்த ஐந்து கட்சிகளும் இந்தியாவினுடைய முகவர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் அந்த அறிக்கையை வெளியிடுவதன் ஊடாக மிகத் தெளிவாக சீனா சார்ந்த கோட்டபாய ராஜபக்சவிற்கு ஒரு செய்தியை அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இந்தியாவினுடையதும் மேற்கு நாடுகளுடையதும் நலன்களை மீறி செயற்படுவதாக இருந்தால் இதுவரைக்கும் தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்களிடமிருந்து இல்லாமல் செய்வதற்கு கூட்டமைப்பு ஊடாக செயற்பட்ட நாங்கள் மீண்டும் தமிழ் மக்களுடைய அடிப்படை அபிலாசைகளை வலியுறுத்துவதற்கும் அவர்களுக்கு அதற்கான இடத்தைக் கொடுக்கப் போவது மட்டுமல்லாமல் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கி ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை தான் கோத்தபாயவிற்கு இந்தியா மேற்கு நாடுகள் தங்களது ஐந்து முகவர் அமைப்புக்கள் ஊடாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதே நேரம் இன்னொரு செய்தியையும் கோட்டபாய ராஜபக்சவிற்கும் அவர் சார்ந்த தரப்புகளுக்கும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒற்றையாட்சிக்குரிய இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்கின்ற கோட்பாட்டை முன்வைத்து மிக இறுக்கமாக அங்கு வாதாடினோம். ஏனென்றால் உண்மையிலையே பொது ஆவணத்தில் முன்வைக்கப்பட்ட அந்தக் கோட்பாடுகளை இந்தத் தரப்புக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால் அந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதில் அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்க முடியாது என்பதால் தான்.

ஆனால் கடந்த நான்கு வருடமாக கூட்டமைப்பு அந்த இடைக்கால அறிக்கையை தயாரித்த நிலையில் அதனை நிராகரிப்பதாக சொன்னால் அவர்களுக்கு அது வெட்கமாக இருக்குமென்று ஒரு சிலர் சொல்ல பார்க்கின்றனர். ஆனால் அப்படியில்லை. அந்த ஆவணத்திலுள்ள இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் அவர்கள் நிராகரித்து தான் வந்தார்கள். அதற்குக் கையொப்பம் இடலாமென்றால் இந்த ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று சொல்வதற்கு கையொப்பம் இட ஏலாது என்று சொல்ல முடியாது.

இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அந்த ஆவணத்திலுள்ள விடயங்களுக்கு நீங்கள் கையொப்பம் இட்டதே உங்களுக்கு வெட்கமாக இருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் அந்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்காமல் இருப்பதற்கு காரணமும் இருக்கிறது. அதாவது அவ்வாறு நிராகரிக்காமல் கோத்தபாய ராஐபக்சவிற்கும் அவர்கள் சார்ந்தவர்களிற்கும்
இரண்டாவது செய்தியை கொடுக்கின்றார்கள். அது என்னவென்றால் சீனாவைக் கைவிட்டு இந்திய மேற்கு ஆதிக்க வட்டத்திற்குள் நீங்கள் நிற்பீர்களாக இருந்தால் உறுதியாக இருப்பீர்களாக இருந்தால் தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியைத் தான் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். இது தான் இன்றைக்கு இருக்கக் கூடிய யதார்த்தம்.

ஆக கூட்டமைப்பும், விக்கினேஸ்வரனுடைய கட்சியும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் அமைப்பும் சேர்ந்த ஐந்து கட்சிகள் இந்திய,மேற்கு நாடுகளுடைய முகவர் அமைப்புக்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றதுடன் தமிழ் மக்களின் நலன் கருதி இன்றைக்கு கூட அவர்கள் செயற்படத் தயாரில்லை. இன்றைக்கும் தங்கள் எஜமான்களுக்கு மட்டும் விசுவாசமாகச் செயற்படத் தயார் என்ற அடிப்படையில் எஜமான் விரும்பினால் எஜமானின் விருப்பத்தின் பிரகாரம் இந்திய மேற்கு நலன்களை மீறிச் செயற்படுபராக கோத்தபாய செயற்படுவாராக இருந்தால் தமிழ் மக்களுடைய அடிப்படைக் கோட்பாடுகளை அவர்கள் பலப்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர் என்று ஒரு பக்கம் ஒரு செய்தியையும் இன்னொரு பக்கத்தில் தங்களுடைய ஆதிக்க வட்டத்திற்குள் வரத் தயாராக இருக்கிற பட்சத்தில் தமிழ் மக்களுடைய அரசியலை முற்று முழுதாக ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கும் தாங்கள் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியைத் தான் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அந்த நிகழ்வு எடுத்துக் காட்டகின்றது.

ஆகையினால் தான் இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற தரப்புக்களில் குறிப்பாக வெல்லக் கூடிய தரப்புக்களான சஐித் பிரேமதாசா அல்லது கோத்தபாய ராஐபக்ச தான். இதில் கோத்தபாய ராஐபக்ச என்பவர் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் கொடுரமான நபர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களிக் முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

அதே நேரம் சஐித் பிரேமதாசாவுடைய தரப்பும் அதே அளவிற்கு மோசமான செயற்பாட்டில் இறங்குவார்கள் என்பதையும் எங்கள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தப் போரை நடாத்தி இனப்படுகொலை செய்தது கோத்தபாய ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் இணைனந்து தான். வரப்போகின்ற சஐித் பிரேமதாசா ஆட்சியில் சரத் பொன்சேகா பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார் என்ற விடயத்தை மிகத் தெளிவாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.

இந்தியாவின் முகவர் அமைப்புக்களான இந்த ஐந்து கட்சிகளும் 13 கோரிக்கைகளை முன்வைத்து தாங்கள் கையொப்பம் இட்டாலும் கூட ஏதோ அந்தக் கோரிக்கைகளை வைத்த தாங்கள் பேரம் பேசுவதாக மக்களுக்கு சொன்னாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேலை செய்த கொண்டிருக்கின்றனர் என்ற இந்த யதார்த்தம் தெரிந்திருக்க வேண்டிய விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய இரண்டு கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த செயற்பாடுகளை எப்போதோ தொடங்கி விட்டன. இன்றைக்கு தமிழ் மக்களுடைய அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்திருந்தும் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு அந்த வாக்குகளை அந்தத் தரப்பிற்கே எடுத்துக் கொடுப்பதற்கான முழு முயற்சியும் நடந்து கொண்டு இருக்கின்றன. இது தான் இன்றைய யதார்த்தம்.

ஆகையினால் தான் இந்த வேட்பாளர்களுக்கிடையே எந்தவொரு இடைவெளியும் கிடையாது என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எங்கள் மக்களுக்குச் சொல்லி வருகிறோம். ஆகவே சிங்கள பௌத்த இனவாதத்தை உச்சரித்து யார் கூட இனவாதியாக தன்னைக் காட்டி சிங்கள மக்களுடைய கூடுதலான வாக்குகளைப் பெறலாமென நினைக்கின்ற இன்றைக்கு இருக்கக் கூடிய அந்தப் போக்கில் ஒரு உடைவை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.