சட்டரீதியில் முரண்பாடற்ற தீர்வை பெற்றுக் கொள்வேன் :அத்துரலியே ரத்ன தேரர்!

ரத்ன தேரர் 1
ரத்ன தேரர் 1

பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும் பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நான் கடத்தப்பட்டதாகவும், தலைமறைவாகியுள்ளதாகவும் பிரதான ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது தேசிய பட்டியல் ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு சட்டரீதியில் முரண்பாடற்ற தீர்வை பெற்றுக் கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அபேஜன பலவேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இல்லாத பிரச்சினைகளை பிரதான ஊடகங்கள் பெரிதுப்படுத்தி தங்களை பிரபல்யப்படுத்திக் கொண்டார்கள். தேசிய பட்டியல் முரண்பாட்டினால் நான் தலைமறைவாகி விட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும் போலியான செய்திகளை வெளியிடுவதை முதலில் இந்த பிரதான ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பௌத்த தேசியவாதத்தை பாதுகாக்கவும், கட்டியெழுப்பவும் பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டோம். 67ஆயிரம் மக்களின் ஆதரவினால் ஒரு தேசிய பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனாலேயே தற்போது முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது.

அபேஜனபல வேகய அமைப்பில் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிட்டோம். கூட்டணியின் பொதுச்செயலாளராக நான் செயற்படுகிறேன் ஆகவே தவறான தரப்பினர் தேசியபட்டியல் ஆசனத்தை கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது. சட்ட வழிமுறை ஊடாக பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற விதத்தில் தீர்வை பெற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.