13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சேதாரம் இல்லை; அடித்து சொல்கிறார் டக்ளஸ்

28 douglas devananda111 1574400911
28 douglas devananda111 1574400911

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்ற நிலையில், கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளையும் திருத்துவதற்கு 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்மைய நாட்களாக 19 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இந்தியாவின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தினையும் இல்லாமல் செய்வதற்கு புதிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சில தரப்புக்களினால் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்ட கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில், புதிய அரசாங்கம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தினை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் நலன்களை அடைந்து கொள்ள முயற்சிக்கும் குறுகிய நலன் கொண்ட அரசியல் தரப்புக்களே இவ்வாறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரவ விடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்கள் தொடர்பில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.