300 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கிய இந்திய அரசாங்கம்!

Madhu contract 2 1024x683 1
Madhu contract 2 1024x683 1

மன்னாரில் 144 தொடர் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்காக 300 மில்லியன் ரூபா நிதியுதவியை இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் மன்னாரில் 144 தொடர் குடியிருப்புக்களை அமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இலங்கையுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வீடமைப்புத்திட்டங்களுக்கான உதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கிவருகின்றது.

அதன்படி 33 பில்லியன் ரூபா நிதியுதவியில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை பெருந்தோட்டப்பகுதியில் 11 பில்லியன் ரூபா செலவில் மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது.

எனவே இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 60,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்மாதிரிக்கிராம வீடமைப்புத்திட்டத்தின் கீழ் சுமார் 3000 வீடுகள் அமைக்கப்பட்டன.

இந்தத் திட்டங்கள் மக்களை மையப்படுத்திய இலங்கையுடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுவரையில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியினளவு 517 பில்லியன் ரூபா என்பதுடன், அதில் 92 பில்லியன் ரூபா நிதியுதவியாகவும் 425 பில்லியன் ரூபா கடனுதவியாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.