குற்றச் செயல்களில் ஈடுபட்ட 26,121 நபர்கள் கைது

Tamil News large 2447868

கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்புக்களின் போது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 26,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1 லட்சத்து மூவாயிரத்து 651 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சுற்றி வளைப்புக்களின் போது ரி-56 ரக 14 துப்பாக்கிகள் அடங்கலாக 298 துப்பாக்கிகளை காவற்துறையினர் பொறுப்பேற்றனர்.

இதேவேளை, உந்துருளிகளில் மீன்களை விற்பனை செய்வது போன்று ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல காவல்துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அண்மையில் கைப்பற்றப்பட்ட 200 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியை கொண்ட மெண்டி என்ற 12 கிலோ கிராம் போதைப்பொருளை கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள படகொன்று அம்பலாங்கொடை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை – படபெதிமுல்ல கடற்கரை பகுதியில் கழிவு பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதாள உலக குழு தலைவர் ஒருவரின் உறவினர் எனக்கூறி புறக்கோட்டை பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை நிலையம் ஒன்றில் 5 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய இருவர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.