- சபையில் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு
“மாற்றம் என்பது சிங்களத் தலைவர்களிடம் வரட்டும். மாற்றம் தமிழர்களிடம் வரவேண்டியதல்ல. தங்களை யார் அழித்தார்களோ, யாரால் தாங்கள் கொல்லப்பட்டார்களோ, யாரிடமிருந்து தமது விடுதலைக்காகப் போராடுகின்றார்களோ அவர்களிடமிருந்தே தமிழர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள்.”
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“70 ஆண்டுகளாக நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்க உரையில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இது மிகவும் மன வருத்தத்துக்குரியது; துரதிர்ஷ்டவசமானது.
இந்த நாட்டின் முதன்மையான பிரச்சினையாக இருப்பது இனப்பிரச்சினை. இந்த நாட்டிலுள்ள இரு தேசிய இனங்களான சிங்கள, தமிழ் இனங்களில் தமிழினம் கடந்த பல வருடங்களாக இனப்படுகொலைகளை – அழிவுகளை சந்தித்து வந்த இனம். அதனால்தான் அவர்கள் மிகவும் நீண்டகால போராட்டத்துக்குள் தமது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்கள்.
அவர்களின் போராட்ட வடிவங்கள் மௌனிக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டின் பிரஜைகள் நாங்கள் என்ற எண்ணம் அவர்களிடம் இன்னும் உருவாகாமல் இருக்கிறது. இந்த நாட்டிலே கொண்டுவரப்படுகின்ற பல்வேறு சட்டங்களும் சிங்கள மக்களின் மனோநிலைகளும் அவர்களை வழிநடத்துகின்ற சிங்களத்தலைவர்களின் எண்ணங்களுமே இன்னும் இந்த நாட்டை வேறுபட்ட நிலைக்குள் வைத்திருக்கின்றது.
இன்றைய அரசு அறுதிப்பெரும்பான்மையோடு , தங்களுக்கு ஒரு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது எனக் கருதிக்கொண்டு மிகக்கூடிய மமதையோடு அரசை நடத்த முனைவார்களேயானால் மீண்டும் இந்த நாடு இனவாத ரீதியான சகதிக்குள் தள்ளப்படும் என்பதற்கு வரலாறு அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதல்ல. ஏனெனில், நீண்ட வரலாற்றுப்பாடங்களை அவர்கள் கற்றுக்கொண்டவர்கள்.
ஒரே தீவினுள் இரண்டு தேசிய இன மக்கள் வாழ்கின்றபோதும் அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படைகளில் கொண்டுள்ளனர். இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தில், அபிவிருத்தியை எட்டுவதில் எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்காது. ஏனெனில், இன்று இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் அபிவிருத்தி என்பது ஒரு பெரிய மாய சொல்லாகச் சொல்லப்படுகின்றது. அபிவிருத்தியைக் காண்பதற்கு முதலில் நாட்டில் இணக்கம் ஏற்படவேண்டும். நாட்டில் வாழும் மக்களிடையில் உறவு ஏற்படுத்தப்பட வேண்டும் . தாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற எண்ணம் அந்த மக்களிடம் கொண்டுவரப்பட வேண்டும். எனவே, அது இல்லாதவரை அபிவிருத்தி என்ற சொல் ஓர் இனத்தின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக அமையாது என்பதனை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் .
நாங்கள் அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளோம், பலத்துடன் இருக்கின்றோம் என்பதனை மட்டும் வைத்துக்கொண்டு தங்களின் பலத்தை மட்டும் பிரயோகிக்க முயன்றால் அது தவறாகிவிடும்.
1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தபோது, ‘இரு மொழிகள் ஒரு நாடு, ஒரு மொழி இரு நாடுகள்’ என்று கூறிய சிரேஷ்ட அரசியல்வாதியும் சிரேஷ்ட சட்டத்தரணியும் சரித்திர ஆசிரியருமான கொல்வின் ஆர்.டி.சில்வா, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஜே .ஆர். உருவாக்கியபோது, ‘உங்களின் காலத்தில் வேண்டுமானால் நீங்கள் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். ஆனால், நீங்கள் போகும்போது இந்தச் சட்டத்தை இரத்துச் செய்து நாடாளுமன்ற அதிகாரம் நிலைக்க வழிவகுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு பின்வரும் ஒருவரும் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டார். கொடூரமாக அவர்கள் இதனை நடைமுறைப்படுத்தக்கூடும்’ என்று கூறினார்.
அந்தக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்குகின்றது. சொந்த மண்ணில் வாழ்வதற்காக – காணி விடுவிப்புக்காக மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இயல்பு வாழ்க்கை இன்னும் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்படவில்லை. இந்த விடயங்களில் நாடு இன்னும் சரியான முன்னேற்றத்தை எட்டவில்லை .
தமிழர்களின் விடுதலைக்காக – தீர்வுக்காக பல்வேறு தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தந்தை செல்வாவும் முன்வைத்தார் இதனையே இன்னும் பலரும் முன்வைத்தனர். ஆனால், இன்றைய சிங்களத்தலைவர்களிடம் அந்த நல்லெண்ணங்கள் இல்லாமல் செல்வது மிக மன வருத்தத்துக்குரியது.
இறுதிப் போரை வெற்றி கொள்வதற்காக உலக நாடுகள் இலங்கைக்குப் பாரிய உதவிகள் புரிந்தன. அப்போது இலங்கையால் அவர்களுக்கு பல உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வந்தபோது அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச தமிழர்களுக்கு 13 பிளஸ் வழங்குவேன் எனக் கூறினார். ஆனால், இதுவரை 13 ஐக்கூட நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நாட்டில் அழிந்துபோன ஓர் இன மக்களின் எண்ணங்களையும், அவர்களுடைய உணர்வுகளையும் மதிக்க வேண்டிய தேவை இந்த நாட்டு மக்களுக்குண்டு. ஓர் இனத்தை அடக்கி, ஒடுக்கி, அழித்து எதனையும் செய்ய முடியாது.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இலங்கை அரசுடன் தமிழர் தரப்பில் கையெழுத்திட்ட இந்தியா தற்போது மௌனம் காப்பது தவறு. இந்தப் பொறுப்பில் இந்தியாவுக்குக் கடமையிருக்கின்றது. இந்த விடயத்தில் இந்தியா தலையிட வேண்டும். உங்களிடமும் பெரும்பான்மையிருக்கின்றது. எனவே, நல்லெண்ணங்களுடன் செயற்படுங்கள்.
சிங்களத் தலைவர்களிடமிருந்தே தமிழ் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். அந்த மாற்றம் அறுதிப்பெரும்பான்மை கொண்டுள்ள – பலத்துடன் இருக்கின்ற உங்களிடமிருந்து வர வேண்டும். நல்லெண்ணங்களை வெளிப்படுத்துங்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கூட கடந்த காலங்களைவிட தற்போது நல்லெண்ணங்கள் இருக்கின்றன என்று பலர் பேசுகின்றனர். எனவே, நீங்கள் மாறவேண்டும்” – என்றார்.