வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஆலோசனை

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 9

மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த கால்வாய் அமைக்கப்பட்ட பின்னர், வட மேல் மாகாணத்தில் இரு போகங்களிலும் 12,500 ஏக்கர் செய்கையை முன்னெடுக்க முடியும் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல், மொரகொல்லாகம, சியம்பலன்கமுவவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உத்தேச வடமேல் மாகாண கால்வாய் திட்டம் குறித்த செயற்றிட்ட அறிக்கை, திட்ட பணிப்பாளர் பொறியியலாளர் அசோக பெரேராவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை, சியம்பலன்கமுவ மீனவ சங்கத்தினரும் பிரதமரிடம் முன்மொழிவொன்றை சமர்ப்பித்தனர்.

இதேவேளை, வடமேல் மாகாண கால்வாய்த் திட்டத்தின் கீழ், 350 சிறு குளங்களும், 08 பாரிய குளங்களும் வளம்பெறவுள்ளன.

இதன் கீழ் அமைக்கப்படும் ஹக்வடுனா நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 2500 ஏக்கர் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம், சிறுநீரக நோய்க்கு தீர்வு வழங்குதல், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், யானை – மனித மோதலைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிட்டவுள்ளன.