க.வி.விக்னேஸ்வரனுக்கு யதார்த்த அரசியல் குறித்து எதுவும் தெரியாது:எம்.பி கெஹலிய!

Keheliya Rambukwella 1 1
Keheliya Rambukwella 1 1

“ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை குறித்து நாங்கள் கடுமையாக அதிர்ச்சி அடைகின்றோம். அவர் முன்னாள் நீதியரசராக இருக்கலாம். ஆனால் , யதார்த்த அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.”

  • இவ்வாறு ராஜபக்ச அரசு குற்றஞ்சாட்டியுள்ளது

9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் உரையாற்றிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நாட்டின் இன ஐக்கியத்தில், ஒற்றுமையில் கடந்த காலத்தில் பல தவறுகள் விடப்பட்டன. யானை சின்னத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி செய்த அதே பிழையான பாதையில் இந்த அரசும் பயணிக்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையையே எதிர்காலத்தில் இந்த அரசும் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை அவர்களின் தேசம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் இந்த நாட்டில் உதயமாகும் என்றும் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையைப் பார்த்தீர்களா? அது தீவிரப்போக்கு உரையாகும். விக்னேஸ்வரன் பேசும்போது நான் அதிருப்தியடைந்துவிட்டேன். வேறு நாளாக இருந்திருந்தால் நான் சபையில் எழுந்திருப்பேன்.

விக்னேஸ்வரனை மீண்டும் இந்த நாட்டில் ஒரு நோயாக மாற வேண்டாம் என்று நாங்கள் கூறுகின்றோம். அவரின் பேச்சு தொடர்பில் அதிருப்தியடைகின்றோம். அவர் முன்னாள் நீதியரசராக இருக்கலாம். ஆனால், யதார்த்த அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது” – என தெரிவித்துள்ளார்.