ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துவதில் அதிக கவனம்

3 1

தெங்கு, கித்துள், பனை மற்றும் இறப்பர் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்றுறைகளை விஸ்தரித்தல், ஏற்றுமதியைப் பன்முகப்படுத்தல் என்பன தொடர்பில் இராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி பயிர்களான கித்துள் மற்றும் பனை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கித்துள் மற்றும் பனை செய்கையை விஸ்தரிப்பதற்கும் அதற்குள்ள தடைகளை களைவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மலைப்பாங்கான பகுதிகளில் பைனஸ் மரங்களுக்கு பதிலாக இறப்பர் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு 2 மில்லியன் தென்னங்கன்றுகளை நடுவதற்கும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ யோசனை முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.