விக்கியை சபையை விட்டு வெளியேற்றுங்கள்!- சஜித் அணி போர்க்கொடி

இலங்கையில் தமிழர்கள் பூர்வீக குடிகள் என்று நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்த வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நாடாளுமன்றத்திலிருந்து உடன் வெளியேற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இன்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் விக்கினேஸ்வரன் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, நளின் பண்டார ஆகியோரே தமது எதிர்ப்பை முன்வைத்தனர்.

“இந்த நாட்டின் பூர்வீகம் தமிழர்கள் எனக் கூறிய விடயத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால், விக்கினேஸ்வரனின் அவைக் குறிப்பில் பதியப்பட்டுள்ளது.

இது ஒழுங்கு விதிகளுக்கு முரணானது. இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? அவர் கூறியது சரி என்பதை அரசு ஏற்றுக்கொள்கின்றதா?

இந்த நாட்டில் இனவாதம், பிரிவினைவாதத்துக்குஇடமளிக்க மாட்டோம் எனச் சாத்தியப்பிரமாணம் செய்துகொண்டோம்.

ஆனால், இதற்கு முரணான விதத்தில் விக்னேஸ்வரன் எம்.பி. செயற்பட்டுள்ளார். அவர் தேசத்துரோக கருத்தை முன்வைத்துள்ளார்.

அதற்கமைய அவரை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்” – என்று அவர்கள் கூறினர்.

எனினும், இதற்குப் பதிலளித்த பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

“அவரது கருத்து முரணானதல்ல. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைய சகல உறுப்பினர்களுக்கும் அவரவர் கருத்துக்களை முன்வைக்க உரிமை உள்ளது.

இதில் அரச நிலைப்பாடு, எதிர்க்கட்சி நிலைப்பாடு என ஒன்றும் இல்லை. யாருக்கும் தமது சுய கருத்துக்களை சபையில் முன்வைக்கும் உரிமை உள்ளது. எனவே, விக்னேஸ்வரனின் உரை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாது” – என்றார்.