புதிய அரசமைப்பு ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட வேண்டும்: எல்லே குணவங்ச தேரர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 32
625.500.560.350.160.300.053.800.900.160.90 32

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு ஒற்றையாட்சி முறைமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று பல சர்வதேச அமைப்புகள் நாட்டுக்குள் வந்துள்ளன. எனவே, சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் மகாநாயக்க தேரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பே தேவைப்படுகின்றது. நடைமுறையிலுள்ள அரசமைப்பில் சில சரத்துகளை இல்லாது செய்து புதிய சரத்துகளை உள்வாங்கும் பணியை முன்னெடுத்து முழுமையானதொரு மறுசீரமைப்பை மேற்கொண்டு புதிய அரசமைப்பை இயற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அரசமைப்பின் 13, 15, 16, 17, 18 மற்றும் 19ஆவது திருத்தச் சட்டங்கள் கட்டாயம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் ஒற்றையாட்சி என்ற பதத்தை அரசமைப்பில் உள்வாங்குவதற்கு நானே நடவடிக்கை எடுத்தேன். அது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மரமொன்றின் கிளைகளைப் பாதுகாப்பதற்கு முதல் ஆணி வேரைப் பாதுகாக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் ஒற்றையாட்சி முறைமை பலப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த நான்கரை வருடங்களில் நாட்டின் இதிகாசம், கலாசாரம், தேசிய வளங்கள் என்பன சீரழிக்கப்பட்டன. துறைமுகம் உள்ளிட்ட இடங்கள் விற்பனை செய்யப்பட்டன. நாட்டை 9 கூறுகளாகப் பிரிக்கும் விதத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டது.

தேசிய கீதத்தை மாற்றுவதற்கு முயற்சித்தனர். பௌத்த மதத்துக்கே முன்னுரிமை என்ற விடயத்திலும் கைவைத்தனர். எனினும் மக்கள் இதனைத் தடுத்து நிறுத்தினர்” என தெரிவித்துள்ளார்.