சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்- நாமல்

EgbnIKDU0AI b7D

சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்த வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் விளையாட்டுப் பாடசாலைகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பாடசாலையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கு எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) கல்வியமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “திறமையற்றவர்களிடையே திறமையானவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, திறமையானவர்களிடையே திறமையானவர்களை உருவாக்குவதற்கும், தேசிய மட்டத்தை மீறி சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் பாடசாலை விளையாட்டினை மேம்படுத்த வேண்டும்.

குறித்த இலக்கினை அடைவதற்காக தற்போதுள்ள விளையாட்டுப் பாடசாலைகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு விளையாட்டுப் பாடசாலையின் முதன்மைத் தேவைகளைக் கண்டறிவதன் ஊடாக அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை நடைமுறையிலுள்ள விளையாட்டுச் சட்டத்தை மாற்றுவதற்கு ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மேம்பாட்டுத் திட்டத்தின்படி விளையாட்டுப்  பாடசாலைகள்  ஊடாக நாட்டிலுள்ள பாடசாலை விளையாட்டுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு பயிற்றுநர்களைப் புதுப்பித்தல் மற்றும் பயிற்றுவித்தல், விளையாட்டுப் பள்ளிகளில் தற்போதுள்ள தங்குமிட வசதிகளை மேம்படுத்துதல், வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, விளையாட்டுப் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதில் வகுப்பறை வசதிகள் போதாமை ஆகியவைகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய, விளையாட்டுப் பாடசாலைகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுப்பதற்கு இதன்போது முன்மொழியப்பட்டது.