வட மாகாண கூட்டுறவு சங்கங்கள், நிறுவன செயற்பாடு திருப்தியாக இல்லை;சாள்ஸ்

78b0d371 918d 4b0c a37f 8aba1f2c39f2
78b0d371 918d 4b0c a37f 8aba1f2c39f2

வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என்று வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது.

சீனாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் விவசாய வங்கிகளே. இத்தாலி நாட்டிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் கூட்டுறவுத் துறையினரதே. அங்கிருக்கும் இறைச்சி, பற்பசை உட்பட அனைத்தும் கூட்டுறவுத்துறையின் தாயாரிப்புக்களாவே காணப்படுகின்றது.

எனவே, கூட்டுறவுத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

வட மாகாணக் கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று வட மாகாண ஆளுநர் திருமதி.பீ.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் வட மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் கேட்டறிந்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் , கூட்டுறவே நாட்டுயர்வு என்று கூறுவார்கள். அவ்வடிப்படையில் பார்த்தால் நமது மாகாணத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சியடையாமலும் சில சங்கங்கள் இயங்காமலும் உள்ளதாக எனக்களிக்கப்பட்ட அறிக்கையினூடாக அறிந்துகொண்டேன்.

அப்படிப் பார்க்கும்போது மாகாண அரசு எவ்வளவு முயன்றும் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டு உறவாக இல்லாமல் தனிமனித சிந்தனையுள்ளவர்களாக நாமிருப்துதான் காரணமாக இருக்குமோவென நான் நினைக்கின்றேன்.

மக்களோடு இணைந்திருக்கும் ஒரு திணைக்களம் தான் இந்தக் கூட்டுறவுத் திணைக்களம். அதற்குப் பரந்த செயற்பாடுகளும் அதிகாரங்களும் இருக்கின்றன. அதனூடாகப் பல கடமைகள் இருக்கின்றன. நமது பொருளாதாரத்தையும் தமத வர்த்தக செயற்பாடுகளையும் வளர்த்தெடுப்பதற்கான கடப்பாடு கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு துறையின் செயற்பாடுகள் சீரான முன்னேற்றப் பாதையில் இல்லையென்பதே கவலையளிக்கின்ற விடயமாகவுள்ளது.

சீரழிந்து போயிருக்கின்ற நமது மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் மக்களோடு மக்களாகவிருக்கும் கூட்டுறவுத்துறையின் செயற்பாட்டில் தான் உள்ளது. தனிமனித செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தவிர்த்துப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களாக கூட்டுறவுத்துறையைச் சார்ந்தவர்கள் செயற்படவேண்டும்.

அப்போது தான் மாகாணசபையின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க இயலும். கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியின்மை தொடர்பான தெளிவானதும் துள்ளியமானதுமான அறிக்கையை கூட்டுறவுத்திணைக்கள ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் எனக்குப் சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது உற்பத்தி மற்றும் தேவைகள் பற்றிய ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். நமக்குத் தேவையான அனைத்தையும் கூடுமானவரை நாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். வெளியில் இருந்து கொள்வனவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

நமது உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தலையும் நாமே செய்யவேண்டும். வெளிநபர்கள் அதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தொழிற்துறைகள் வளரவில்லை என்றால் ஆணையாளர்களும் பணிப்பாளர்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத் திணைக்களம் முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.