வீதி திருத்த நிதியிலேயே பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டு அமைக்கப்பட்டது; நகரசபை தெரிவிப்பு

10

வவுனியா நகரசபைக்குட்பட்ட 6 ஆம் வட்டாரத்தில் வீதி திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே பண்டாரவன்னியன் சிலைக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதாக வவுனியா நகரசபை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கம்பீரமாக காணப்பட்ட பண்டாரவன்னியனின் சிலைக்கு வருடத்தில் ஒருதடவை நினைவு தினத்தில் மாலை போடுவதற்கு வசதியாக மூன்று இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபா (375000) பெறுமதியில் படிக்கட்டு அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த படிக்கட்டு அமைக்கப்பட்டமை மற்றும் நிதி விடயங்களை கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நகரசபையால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 20.02.2020 அன்று நடைபெற்ற சபை கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஆறாம் வட்டாரத்திற்கு 45 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டம் பிரிக்கப்பட்டதாகவும் அதில் சிறைச்சாலை வீதியூடாக சென்று சந்தை உள்வட்ட வீதிக்கு செல்லும் வீதியை புனரமைப்பு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சத்து அறுபத்து ஐயாயிரம் ரூபாவில் இரண்டு இலட்சத்து நாற்பத்தி ஐயாயிரம் ரூபா குறித்த வட்டார உறுப்பினரின் முன்மொழிவுடன் ஏகமனதாக பண்டாரவன்னியன் சிலை அமைப்பதற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறாம் வட்டாரத்தில் பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வருடத்தில் ஒரு தடவை பயன்படுத்துவதற்காக அபிவிருத்திக்கு வந்த நிதியை மாற்றி படிக்கட்டுகள் அமைக்க வட்டார உறுப்பினர் செயற்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.