கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஊழியர் ஒருவர் பலி!

sihan 66

அம்பாறை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்துக் கொண்டுள்ள கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

தீப்பற்றி எரியும் “MT NEW DIAMOND“ என்ற கப்பலின் ஊழியர்களில் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இலங்கை வான்படைக்கு சொந்தமான பீச் கிராப்ட் மற்றும் எம்.ஐ. 17 ரக உலங்கு வானுர்தி அங்கு அனுப்பபட்டதாக வான்படை ஊடக பேச்சாளர் க்ரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடற்படைக்கு சொந்தமான படகுடன் இந்தியா மற்றும் ரஷ்ய கடற்படைகளின் படகுகளும் இணைந்துள்ளன.

2 லட்சத்து 70 ஆயிரம் டன் மசகு எண்ணெயுடன் பயணித்த குறித்த கப்பலில் நேற்று (வியாழக்கிழமை) காலை தீப்பரவல் ஏற்பட்டது.

அந்த கப்பலில் பணிக்குழாமினர் 23 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்திருந்த நிலையில் தற்போது கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தீப்பரவலால் காயமடைந்த பணிக்குழாம் உறுப்பினர் ஒருவர் மீட்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

sihan 57