ரவியின் மனுவுக்கு ஆட்சேபனை: சட்டமா அதிபருக்கு கால அவகாசம்

2 2

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரைக் கைதுசெய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்த மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனை முன்வைப்பதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கியின் இரண்டு பிணைமுறி வழங்கல்களில், சுமார் 52 பில்லியன் ரூபா அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நேற்று மீண்டும் மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபரின் சார்பில் முன்னிலையாகிய பிரதி சொலிசிட்டர் நாயகம் மிலிந்த குணதிலக, குறித்த மனுக்களுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்காக கால அவகாசம் கோரினார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், ஆட்சேபனைகளை முன்வைப்பதற்காக சட்டமா அதிபருக்கு எதிர்வரும் 14ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ், அந்நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், பணிப்பாளர்களான கசுன் பலிசேன, சித்த ரஞ்சன் ஹுலுகல்லே மற்றும் இலங்கை மத்திய வங்கியின் இரு அதிகாரிகளான எஸ். பத்மநாதன், இந்திக சமன் குமார ஆகியோரினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.