தவறை ஒப்புக் கொண்ட முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி

isisi
isisi

தான் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்காது நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு என முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (08) சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சாட்சி வழங்கிய அவர், தான் 38 வருடங்களாக இலங்கை பொலிஸில் கடமையாற்றி 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டு பாதுகாப்பு செயலாளராக இருந்த பி.எம்.யு.டி பஸ்நாயக்க தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக தன்னை பொறுப்பேற்குமாறு வேண்டி கொண்ட சந்தர்ப்பத்தில் தான் அதனை ஏற்காவிடினும் பின்னர் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரின் வற்புறுத்தலுக்கு அமைய அப்பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது நீங்கள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கினீர்களா என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த கேள்விக்கு ´ஆம்´ என அவர் பதிலளித்ததை அடுத்து அது தவறான விடயம் என தற்போது எண்ணுகின்றீர்களா என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், தான் அக்காலத்தில் பின்பற்றிய நடைமுறை தவறானது என தெரிவித்துள்ளார்.

இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 52 நாள் அரசாங்கத்தின் பின்னர் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தனக்கு அழைப்பு விடுத்து ´பொலிஸ்மா அதிபரை பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு வர வேண்டாம் என கூறுமாறு ஜனாதிபதி கூறியதாக தெரிவித்தார்´ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.