உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மத்திய நிலையம் அமைப்பது தொடர்பாக ஆராய்வு.

IMG20200918105138
IMG20200918105138

வவுனியா வடக்கில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிப்பதற்காக மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் ஆராயப்பட்டுள்ளது .

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கு.திலீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது ,

இதன்போது வவுனியா வடக்கில் உள்ள மரக்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வவுனியா நகரிற்கு எடுத்துச்சென்றே அவற்றை சந்தைப்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அதற்கு கூட சரியான வாகன வசதிகள் இல்லை எனவும் இதனால் விவசாயிகள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாவதாகவும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

எனவே குறித்த பிரச்சனைக்கு மரக்கறி மற்றும் பழ வகைகளை விவசாயிகளிடம் இருந்து சேகரிப்பதற்காக ஒரு மத்திய நிலையத்தையோ அல்லது சந்தை வாய்ப்பையோ இப்பகுதியில் ஏற்படுத்தி தரும் பட்சத்தில் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வவுனியா வடக்கில் மரக்கறி மற்றும் பழங்களை சேகரிப்பதற்காக அல்லது அதனை சந்தைப்படுத்துவதற்காக மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும், அதற்கான இடத்தை தெரிவு செய்வது தொடர்பாகவும் ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .