இறுதித் தீர்மானத்துக்காக இன்று கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்

tamil parties
tamil parties

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத நிலையில், இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளன.

அதற்கமைய இந்த கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது.

தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுப்பதர்காக 5 தமிழ் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பிரைட் இன் விருந்தினர் விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி மூன்றரை மணி நேரம் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி ஆராய்ந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பிரதான கட்சியினர் ஏற்காத பட்சத்தில் தமிழ் மக்கள் திட்டவட்டமான முடிவுகள் எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவர் என குறிப்பிட்டார்.

அதற்கமைய ஐந்து தேசியக் கட்சிகளும் நாளை மறுதினம் அதாவது இன்று ஒள்றுகூடி ஆராய்ந்து ஒரு முடிவினை எடுப்போம் என தெரிவித்திருந்தார். அதற்கமையவே இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 13 தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வராத நிலையில், எந்தவொரு வேட்பாளருக்கும் தமிழ்க் கட்சிகள் ஆதரவளிக்கக் கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.