ஆரம்பிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானப் புனரமைப்புப் பணிகள்!

மைதானம்
மைதானம்

மதுரங்குளி மாதிரிப் பாடசாலையின் விளையாட்டு மைதானப் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன் போது மதுரங்குளி நகரிலுள்ள மாதிரி சிங்கள பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு மாணவர்களுடன் சுமுகமன கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானம் புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன், மதுரங்குளி மாதிரி பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை உடனடியாக புனரமைத்து கொடுக்குமாறு இராணுவத் தளபதிக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டதுடன், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலத்தையும் அவசரமாக அமைத்துக்கொடுக்குமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேராவின் மேற்பார்வையில் இலங்கை இராணுவத்தினர் குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்புப் பணிகளை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.