கண்டியில் இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டடம் தொடர்பில்!

1 14 2

சீரற்ற காலநிலையால் கண்டியில் இன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒன்றரை மாதப் பச்சிளம் குழந்தையும், அக்குழந்தையின் தாய், தந்தையும் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளனர்.

கண்டி – பூவெலிகட சங்கமித்த மாவத்தையில், இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தாழிறக்கச் சம்பவத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்தக் கட்டடத்துக்கு அருகில் இருந்த 2 வீடுகளும் நிர்மூலமாகியுள்ளன.

இந்த இடிபாடுகளில் சிக்கி ஒரு வீட்டிலிருந்த ஒன்றரை மாதப் பச்சிளம் குழந்தையும், அக்குழந்தையின் பெற்றோரும் என 3 பேர் நசியுண்டு பரிதாபகரமாகப் பலியாகியுள்ளனர்.

சாமில பிரசாத் (வயது 35), அச்சலா ஏகநாயக்க (வயது 32) மற்றும் அவர்களது ஒன்றரை மாத வயதுடைய குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் காலையிலேயே குழந்தையைப் படுகாயங்களுடன் மீட்டு கண்டி போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பிற்பகல் சாமில பிரசாத், அச்சலா ஏகநாயக்க ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அச்சலா ஏகநாயக்க ஒரு சட்டத்தரணி. திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரின் கணவர் சாமில பிரசாத் அதே இடத்தில் ஒரு ஹோட்டலை நடத்தி வந்துள்ளார்.

கட்டடத்தின் நுழைவாயில் பகுதியைத் தவிர, மிகுதி அனைத்துப் பகுதிகளும் இடிந்து விழுந்து விட்டன.

கட்டடம் இடிந்து விழும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அதிகாலை 3 மணிக்கே கட்டட உரிமையாளர் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் கட்டடத்தை விட்டு வெளியேறிவிட்டார். ஆனால், அவர் அயல் வீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் அமைதியாக வெளியேறிவிட்டார்.

கட்டடம் இடிந்து அருகிலிருந்த இரண்டு வீடுகளின் மீது விழுந்துள்ளது. அதில் அயல் வீடொன்றில் வசித்த தம்பதியும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர். எனினும், அந்த வீட்டிலிருந்த தம்பதியினரின் இரு உறவினர்கள் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சலா ஏகநாயக்கரின் தாயார் ஜெயந்தி ஏகநாயக்க (வயது 60) தெரிவித்ததாவது:-

“நான் ஹோட்டலில் பணிபுரியும் இளைய மகளுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த அறையில் மகள், கணவன், பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை ஐந்து மணியளவில் ஒரு பெரிய சத்தம் வந்தது. எதுவும் தெரியவில்லை. அறையின் சுவர்கள் உடைக்கப்பட்டு மூடப்பட்டேன். இருட்டில் எதுவும் தோன்றவில்லை. மெதுவாக தடவி படுக்கையின் அருகே தொலைபேசியைப் எடுத்தேன். அங்கிருந்தபடியே 119 ஐ அழைத்து சொன்னேன். சிறிது நேரத்தில், பொலிஸார் வந்தனர்.

ஒரு குழு எம்மை கயிறு மூலம் மீட்டனர். எமக்கு முன்பாக இருந்த மகள், மருமகன், குழந்தை இருந்த அறை முற்றாக இடிந்திருந்தது” – என்றார்.

இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் உரிமையாளர், அவரது குடும்பத்தினர் யாரும் காயமடையவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.