கிராம சேவகர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

Grama Niladhari
Grama Niladhari

கிராம சேவகர்களினால் ஆற்றப்பட வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முறைமைப்படுத்தும் சுற்றுநிரூபம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், கிராம சேவகர்கள் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதை முறைமைப்படுத்தும் விதமாக உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் உள்நாட்டு அலுவல்கள் தொடர்பான 16/2020 இலக்க சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிராமசேவகர்கள் தமக்குரிய ஓய்வுநாளைத் தவிர ஏனைய ஆறு நாட்களும் 24 மணிநேரமும் தமக்குரிய கிராம சேவகப் பிரிவில் உரிய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்குக் கடமைப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் அனைத்து கிராம‍ சேவகர்களும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகங்களில் அவசியம் இருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சனிக்கிழமைகளில் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 12.30 மணிவரையும் தமது அலுவலங்களில் கிராம‍ சேவகர்கள் இருக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகக் கூட்டங்கள் மற்றும் ஏனைய மூன்று நாட்களில் ஒரு நாளை தமக்கான ஓய்வுநாளாகவும் ஏனைய இரு நாட்களை அலுவலகக் கடமைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இவையனைத்தும் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், இதுகுறித்து தத்தமது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு கிராமசேவகர்களால் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.