தோட்டத் தொழிலாளர் சங்க நிர்வாக செயற்பாடுகளுக்கு ஐ.தே.க ஒத்துழைக்க வேண்டும் – ஹரின்

Harin Fernando
Harin Fernando

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க வேண்டுமென இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலம் தொடக்கம் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமானது ஐக்கிய தேசிய கட்சியினாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஐ.தே.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஒரு சிக்கல் நிலைமை ஏற்பட்டது. 

கடந்த தேர்தலில் ஐ.தே.க.வால் ஒரு ஆசனத்தை கூட வெற்றி கொள்ளமுடியவில்லை. ஐ.தே.க.விலிருந்து விலகிச் சென்ற அணி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் 54 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

எனவே ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ளாத ஐ.தே.க.வால் எவ்வாறு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினை நிர்வகிக்க முடியும். 54 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் குரல் கொடுக்க முடியும்.

தோட்டத் தொழிலாளர்களின் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பில் குரல் கொடுப்பதற்காகவே நான் இத்தலைமைப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன். எனவே நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.