வாக்களிப்பதற்கு அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தேசிய ரீதியில் நடாத்தப்படும் தேர்தல்களின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறைகள் இழப்பின்றி தமது வாக்கினை அளிப்பதற்கு முடியுமான வகையில் விடுமுறை வழங்குதல் வேண்டும்.

தமது வாக்கினையளிப்பதற்கு முடியுமான வகையில் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறையை வழங்குவதற்கு தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென 1981 இன் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 110 ஆவது பிரிவில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019.11.16 ஆம் திகதி நடாத்தப்படவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் அந்த ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படல் வேண்டும்

அரசதுறை ஊழியர்கள் ஜனாதிபதித் தேர்தலின்போது குறைந்தது 4 மணித்தியாலங்கள் வாக்களிக்கச் செல்வதற்குத் தேவையென கருதும் தொடர்ச்சியான காலப்பகுதிக்கு சம்பள இழப்பின்றி விசேட விடுமுறை வழங்கவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும் தனியார்துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அலவாரான எழுத்து மூலமான கட்டளை பிறப்பிக்கப்பட்ட விசேட விடுமுறை வழங்கும் முறையொன்று இல்லாமையின் காரணமாக அனேகமான தொழில் வழங்குநர்கள் தமது தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு விடுமுறை வழங்குவதில்லையென முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கமையஆணையாளர் நாயகம், தேர்தல் ஆணையாளர் ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடாத்தப்பட்ட – கலந்துரையாடலின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய தேசிய ரீதியில் நடாத்தப்படும் தேர்தலொன்றின்போது

தனியார் துறை ஊழியர்கள் தமது வாக்கை அளிப்பதற்கு செல்வதற்கு மற்றும் திரும்பி வருவதற்கான விடுமுறையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தூரம் மற்றும் காலம் என்பவற்றிற்கிடையில் தொடர்புபடுத்தி விடுமுறை வழங்குதல் சம்பந்தமான முறையொன்றைத் தயாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவித்தல்களுக்கமைய தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமது வாக்கை அளிப்பதற்குச் செல்வதற்காக விடுமுறை வழங்குவதற்கு பொருத்தமென பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி

  • 40 கி.மீ அல்லது அதிலும் குறைவெனில் அரை நாள்
  • 40 கி.மீ – 100 கி.மீ இற்கிடையில் எனில் ஒரு நாள்
  • 100 கி.மீ – 150 கி.மீ இற்கிடையில் எனில் ஒன்றரை நாட்கள்
  • 150 கிமீ இலும் அதிகமெனில் 2 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலுள்ள அட்டவணையில் மிகக் குறைந்த காலம் முன்மொழியப்பட்டுள்ளதுடன் நாட்டில் சில வாக்காளர்களுக்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு சென்று வருவதற்கு மூன்று நாட்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களும் குறிப்பிடத்தக்களவில் இருப்பதனால் சந்தர்ப்பத்திற்கேற்ப மூன்று நாட்கள் விடுமுறை வழங்கவேண்டியேற்படும் என்பதனையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

அத்துடன் அனைத்து தொழிலாளர்களும் தமது வாக்கையளிப்பதற்கு மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதியைப் பார்க்கிலும் குறைந்த காலப்பகுதியை விடுமுறையாகப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வார்களாயின் அது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயலாகும்.

இங்கு தொழிலாளர்கள், எழுத்துமூலமான கோரிக்கையொன்றினூடாக விடுமுறையைக் கோர வேண்டும்.

அனைத்து தொழில் வழங்குநர்களும் விசேட விடுமுறையைக் கோரிய நபர்கள் மற்றும் விடுமுறை வழங்கிய காலப்பகுதி என்பன போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைத் தயாரித்து அதனை சேவை நிலையமொன்றில் காட்சிப்படுத்தல் வேண்டும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களைக் கவனத்தில் கொண்டு தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இணைந்து தயாரிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்கி தமது நிறுவனத்தின் தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு மற்றும் திரும்பி வருவதற்கு போதுமானளவு விடுமுறையை வழங்குமாறு அனைத்து தொழில் வழங்குநர்களிடமும் தயவாய் வேண்டிக்கொள்ளப்படுகின்றது.