81 விண்ணப்பங்களில் 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே வடக்கில் முன்னெடுப்பு – அங்கஜன்

angayan
angayan

2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை இலங்கை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 முதலீட்டுத்திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வடமாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் தொடர்பான தரவுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

அதனுடன் இணைந்ததாக அவர் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது,

வடக்கில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை முதலீட்டுச்சபையின் ஊடாக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இக்காலப்பகுதியில் 9,462 முதலீட்டு விண்ணப்பங்களை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருக்கிறது. 

அவற்றில் வடமாகாணத்தை மையப்படுத்தியதாக வெறுமனே 100 திட்டங்களுக்கான முதலீடுகளே காணப்பட்டதுடன் தற்போது முதலீட்டுச்சபையினால் அனுமதியளிக்கப்பட்ட 22 திட்டங்கள் மாத்திரமே வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான 81 விண்ணப்பங்களை முதலீட்டுச்சபை பெற்றுக்கொண்டிருந்தது. எனினும் அவற்றில் அனுமதியளிக்கப்பட்ட 15 திட்டங்கள் மாத்திரமே தற்போது வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி அவற்றில் 10 திட்டங்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையை மைப்படுத்தியதாக அமைந்திருக்கின்றன.