அம்பாறை மாவட்டத்தில் கிராமங்களை சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் இடம்பெறவுள்ளது!

கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட திட்டத்திற்கமைய, இராணுவத்தினரினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிராமங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வேலைத் திட்டம் தொடர்பாக, கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று 2020/20/02ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் எம்.ஏசி.அகமட் நஸீல் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் மற்றும் தீகவாபி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிமுதல் கிராமங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம் பெறவுள்ளது.

இராணுவத்தினர், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியன இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத்திட்ட பிரிவிற்குப் பொறுப்பான கிராமசேவகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அங்கத்தவர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் இவ்வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.