ஊடகங்களிற்கான நீதியை நிலைநாட்டுவது அடுத்த ஜனாதிபதியின் இலக்கு

 ஊடக இயக்கம்
ஊடக இயக்கம்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்ட வாக்களித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவடையும் போது அது தொடர்பிலான நீதியை நிலைநாட்டாமை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவது, அடுத்த ஜனாதிபதியின் முதன்மைப் பொறுப்பாகும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி, அனுஷ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூறும் பொருட்டு, சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள குறித்த இயக்கம்,

2000-2015 காலப்பகுதியினுள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளில் நீதி நிலைநாட்டப்படாத 30 சம்பவங்கள் தொடர்பாக, சுதந்திர ஊடக இயக்கம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரிய வருவதாவதாகவும் அவற்றில் ஒரு சம்பவம் தொடர்பாகவேனும் நீதியை நிலைநாட்ட இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அது தவிர புலனாகிய முக்கியமான பிரச்சினையாக, சில சம்பவங்கள் தொடர்பாக சரியான, போதுமான தகவல்கள் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களிடம் இல்லை என்றும் சில சம்பவங்கள் தொடர்பாக அரச உத்தியோகபூர்வ அறிக்கைகள், உண்மையான நிலைமைக்குமிடையே பாரிய இடைவெளியொன்று நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட இந்நாட்டின் ஊடக இயக்கங்கள், மேற்படி வன்முறைகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வ அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியதாகவும் எனினும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றவும் தற்போதுள்ள ஜனாதிபதியால் முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, நீதியை நிலைநாட்டுவது பிரதான வாக்குறுதியொன்றாக மாறியிருந்தாலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பாரதூரமான பிரச்சினையில் அவ்வாறானதொரு அவதானம் செலுத்தப்படாமை குறித்தும் சுதந்திர ஊடக இயக்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது எந்தவொரு அரசாங்கத்தினதும் பிரதான பொறுப்பாகும் என்று சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.