புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் 42 ஆவது நினைவு தினம்

periyathampipillai
periyathampipillai

கிழக்கு மண்ணின் புகழ்பூத்த மாபெரும் தமிழறிஞர்களில் ஒருவரான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் 42 ஆவது நினைவு தினமாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் (வலயக் கல்விப் பணிமனைக்கு அருகாமையில்) அமைந்திருக்கும் புலவர்மணி அவர்களின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

புலவர்மணி அவர்களது வாழ்வியலிருந்து ஒரு சில துளிகள்

மட்டக்களப்பு மண்டூர் எனும் பழம்பதியில் வாழ்ந்த ஏகாம்பரப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதியரின் மூத்த புதல்வரே புலவர்மணி அவர்கள்.

புலவர்மணி தனது ஐந்தாம் வகுப்புவரை மண்டூர் வெஸ்லியன் மிசன் பாடசாலையில் பயின்றார். இதன் பின்னர் தனது இல்லத்தின் ஒரு புறத்தில் யாழ்ப்பாணம் புலோலி சந்திரசேகரம் உபாத்தியாரிடம் குருகுலக் கல்வியைத் தொடர்ந்தார். அங்கே திருச்செந்தூர்ப் புராணம், நிகண்டு, சூடாமணி, இராமாயணம், மகாபாரதம், கந்தப்புராணம் போன்றவற்றை கற்றுத்தேர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து கல்முனை வெஸ்லியன் மிசன் பாடசாலையில் (தற்போதைய வெஸ்லி உயர்தரக் கல்லூரி) இணைந்து தனது ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் வண்ணார்பண்ணையிலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் தனது தமிழ்க் கல்வியை தொடரும் வாய்ப்பைப் பெற்றார்.

இங்கு புலவர்மணியுடன் ஒன்றாக இணைந்து கல்வி பயின்றவர்களில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். தனக்கு யாழ் மண்ணில் பேருதவியாக விளங்கிய பண்டிதர் மகாலிங்க சிவத்தையும் இறுதிவரை புலவர்மணி நினைவுகூரவே செய்தார்.

மேலும் இங்கு வாழ்ந்த காலத்தில்தான் புலவர்மணிக்கு சுவாமி விபுலாநந்தரின் தொடர்பில் விவேகானந்த சபையின் நெருக்கமும் யோகர்சுவாமி போன்றவர்களின் பழக்கமும் கிடைக்கப்பெறுவதாயிற்று. கூடவே அடிக்கடி அங்கு இடம்பெறும் விபுலானந்தரின் சொற்பொழிவு நிகழ்வின் தொகுப்பாளராகவும் புலவர்மணி செயல்படலானார். இதுவே பின்னாளில் புலவர்மணி தலைசிறந்த சொற்பொழிவாளராக விளங்க அவருக்கு வழியமைத்துக்கொடுத்தது எனலாம்.

அங்கு தனது படிப்பை முடித்துக்கொண்ட புலவர்மணி சிறிது காலம் நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை சைவ வித்தியாசாலையிலும் அதன்பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் ணியாற்றலானார். இதன்போது அவர் அங்குள்ள இந்து வாலிபர் சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தார்.

மேலும் யாழ்பாணத்தில் வாழ்ந்த காலப்பகுதியில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த கல்வியறிவுடைய சிறந்த தமிழறிஞர்கள், இசைவாணர்கள் போன்றவர்களுடன் புலவர்மணி உரையாடிமகிழ்வதும் அவர்களுடன் பிரியமாகப் பழகுவதும் அங்குள்ள சில இந்துக் கனவான்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

அவர்கள் புலவர்மணியை கடும் வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள். இது புலவர்மணியின் நெஞ்சில் எரிதணலாய் தொடர்ந்து கனன்றுகொண்டேயிருந்தது. அவர் தனது 24வது வயதில் கிறிஸ்தவத்தைத் தழுவ முக்கிய கால்கோளாயும் இது அமைந்துவிட்டது.

அதன்பின்னர் தனது 24ஆம் வயதின் பிற்பகுதியில் கிறிஸ்தவன் என்ற அடையாளத்துடன் அதிலே மேலும் பயிற்சியினைப் பெறுவதற்காக தமிழ்நாட்டின் மதுரையை அண்மித்த பசுமலைக்கு புலவர்மணி சென்றார். அவர் அங்கு வாழ்ந்த ஒரு குறுகிய காலத்துள் கிறிஸ்தவ மதத்திற்கு அளப்பரிய சேவையினைப் புரிந்தவராகவே கணிப்பிடப்படுகின்றார்.

அவர் அங்கு நிகழ்த்திய கிறிஸ்தவமத உரைகள் சார்ந்த வெளியீடுகள் எழுதிய கட்டுரைகள் இன்றும் அங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளமையைப் பார்க்கின்றோம். இந்தியாவில் வாழ்ந்த காலப்பகுதியில் அங்கு சுவாமி விபுலானந்தரினால் ஆட்கொள்ளப்பட்டு தனது 26 ஆவது வயதில் மீண்டும் சைவத்தைத் தழுவிக்கொண்டார்.

1926 ஆவணியில் தனது 27ஆம் வயதில் புலவர்மணி தன்னை இல்லறவாழ்வில் இணைத்துக்கொண்டார். பலராலும் அறியப்பட்ட குருக்கள்மடம் குமரப்பெருமாள் உடையார் அவர்களது பேத்தியார் நல்லம்மா மாதரசியே புலவர்மணியைக் கைத்தலம் பற்றிய பேற்றினுக்குரியவர். இவர்களுக்கு நான்கு புதல்வர்களும் இரு புதல்வியரும் நன்மக்களாக வாய்த்தனர். திருமணம் நடைபெற்ற அதேமாதத்திலேயே சுவாமி விபுலானந்தர் அவர்கள்மூலம் திருமணப் பரிசாகக் கிடைத்த நற்செய்தியை ஏற்று திருகோணமலை இந்துக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக புலவர்மணி பதவியேற்றார்.

பின்னர் 1930ல் மட்டக்களப்பு – புளியந்தீவு புனித அகஸ்தினார் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் தமிழ்ப் பண்டிதராகப் பொறுப்பேற்றார். அத்தோடு கூடவே மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையிலும் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பணிபுரியலானார்.

1935 முதல் அவரது நாட்டம் முழுக்க முழுக்க அரசியல் பக்கமே சாய்ந்தது. அதனைத் தொடர்ந்து சிலகாலம் மண்டூர் உபதபால் அதிபராகவும் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணியாற்றலானார்.

அதன்பின்னர் மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பெரும்பணியாற்றிய நல்லையா அவர்களது வேண்டுதலால் 1947 முதல் ‘கிழக்கின் சாந்தி நிகேதனம்’ என புலவர்மணி குறிப்பிடும் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் (இந்துக் கல்லூரி) தமிழாசானாகப் பொறுப்பேற்றார்.

1959 பெப்ரவரி 15ல் அவர் ஓய்வுபெறும்வரை அவரது ஆசிரியப்பணி இங்கு நீடித்தது. தொடர்ந்தும் ஓய்வொழிச்சலின்றி நற்பணியாற்றிய புலவர்மணி அவர்கள் 1978 நவம்பர் 02ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

-வி.ரவீந்திரமூர்த்தி-