ஹாரகம – ஹோனவத்த பகுதியில் புதையல் தோண்டிய நபர் கைது!

dfgh
dfgh

தொல்பொருள் சிறப்புடைய ஹாரகம – ஹோனவத்த புராதன விகாரை பூமிக்கு அருகிலுள்ள கற்குகையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தலவத்து ஓயா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய திங்கட்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க ஆபரண கைத்தொழில் செய்யும் ஹாரகம பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து புதையலைத் தோண்ட பயன்படுத்திய மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவலி ஆற்றின் கரையில் உள்ள இந்த விகாரையின் ஒரு பகுதி விக்டோரியா நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கியது. அதனால் கைவிடப்பட்ட நிலையிலிருந்த குறித்த விகாரையின் சில தொல்பொருள் சிறப்புமிக்க மற்றும் பெறுமதியுடைய விடயங்கள் காரணமாக குறித்த விகாரை தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் சிறப்புடைய விகாரையாக பெயர் குறிக்கப்பட்டிருந்தது.

தலவத்து ஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அருண கிரிஷாந்தவின் வழிகாட்டலின் படி மோட்டார் வாகன பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விஜேசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் மஹிந்தசிறி உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்நதனர். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.