அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் சகல மட்டத்திலும் குறைவாக உள்ளது – டி.எம்.எல்.பண்டாரநாயக்க

அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவ செயற்பாடுகளை கொண்டு செல்வதற்கான ஆர்வமானது சகல மட்டத்திலும் குறைவாக உள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக பல்வேறு வகையான இயற்கை அனர்த்தங்களை உலக நாடுகள் எதிர்நோக்கி வருகின்றன. இதன் காரணமாக மனித உயிர்கள், கட்டுமானங்கள், பொருளாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் என்பவற்றில் பாரிய அழிவை ஏற்படுத்தி இதன் விளைவாக உலக நாடுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன.

ஆசியா மற்றும் பசுபிக் நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. 2019ஆம் ஆண்டில் இயற்கை அனர்த்த நிகழ்வுகளின்படி இலங்கையானது இரண்டாம் இடத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதான காரணம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளில்
அனர்த்த அபாய குறைப்பு, சுற்றுச் சூழல் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற நழுவல் போக்கு போன்ற விடயங்களில் ஒன்றாகவும் முறையாகவும் செயற்படாமையின் காரணமாக அனர்த்த ஆபத்து வலுவடைந்து அனர்த்தங்கள் ஏற்படுவதுடன் இழப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

அனர்த்தத்திற்கு முன்னர் செயல்படுத்தவேண்டிய அனர்த்த குறைப்பு, அனர்த்த தணிப்பு, அனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

ஆனால் இவை தொடர்பில் திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முழுமையான கவனம் செலுத்த தவறியதன் விளைவாக அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்காக சுமார் 300க்கும் மேற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் சகல பிரதேச செயலகங்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் ஏனைய துறைகளிலும் உள்ளனர். 2019ஆம் ஆண்டு அதற்கான முழு முயற்சிகளையும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அது மாத்திரமல்லாமல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலும் அனர்த்த அபாய குறைப்பு முகாமைத்துவ செயற்பாடுகளை கொண்டு செல்வதற்கான ஆர்வம் சகல மட்டத்திலும் குறைவாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச அனர்த்த அபாய குறைப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒக்டோபர் 07-13ஆம் திகதி வரை அனர்த்த அபாய குறைப்பு செயல்பாடுகளை சகல பிரதேச செயலகங்களில் மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளரினால் வேண்டப்பட்டுள்ளார்கள்.