வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் சந்திப்பதில் சிரமம்!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்குரிய நேரம் காலம் என்பனவற்றை தெரிவிக்காததால் அவர்களை சந்தித்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு சிரமப்படுகின்றனர்.

தினமும் பல பொதுமக்கள் அவர்களது அலுவலகங்கள் தெரியாமல் அலைந்து திரிவதுடன் பொது அமைப்புக்களிடம் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது . 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே காணப்படும் நீண்ட இடைவெளியை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ் . சந்திரகுமார் கோரியுள்ளார் . 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு தினமும் பல பொதுமக்கள் அவர்களது அலுவலகங்கள் கேட்டும் சரியான தொலைபேசி இலக்கங்கள் கேட்டும் அலைந்து திரிகின்றனர் . இவ்வாறு அலைந்து திரிந்து இறுதியில் எமது அமைப்பின் அலுவலகத்திற்குள் தஞ்சமடைவதுடன் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித்தருமாறும் கோருகின்றனர் . 

வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு அலுவலகங்கள் சிலருக்கு இருந்தாலும் அங்கு அவர்கள் இருப்பதில்லை. அல்லது அங்கு பணியாற்றுபவர் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையே சரியான தொடர்பாடல்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுவதில்லை .

இதனால், பல கிராமங்களிலிருந்து பல்வேறு தேவைகளின் நிமித்தம் நகருக்கு வரும் பொதுமக்கள் அவர்களது அலுவலகங்கள் கேட்டு தினமும் தேடியலைந்து திரிகின்றனர் . அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்த மக்கள் சந்திப்பதற்குரிய நேரம், நாட்களை தமது அலுவலகத்தில் எங்கும் காட்சிப்படுத்தவில்லை . இதனால் தினமும் அவரை சந்திப்பதற்கு மக்கள் அலைந்து திரிகின்றதைக் காணகூடியதாக உள்ளது .

அரச அதிகாரிகளை சந்திப்பதற்கு காலம், நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந் நடைமுறைகள் பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. ஆனால் வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களை எங்கு சந்திப்பது எவ்வாறு தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வது என்பது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்குமிடையே காணப்படும் நீண்ட இடைவெளியை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .