கொரோன தொடர்பான மக்களின் அலட்சியத்திற்கு காரணம் அரசாங்கமே -லக்ஷ்மன் கிரியெல்ல

lakshman 850x460 acf cropped 1
lakshman 850x460 acf cropped 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இல்லையென அரசாங்கம் பிரசாரம் செய்துவந்ததாலேயே மக்கள் அதுதொடர்பாக அலட்சியமாக இருந்தனர் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) தனிப்பட்ட தெளிவுபடுத்தல் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கு நாங்கள் அனைவரும் முகங்கொடுத்து வருகின்றோம்.

ஆனால், கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இன்று கொரோனா முழு உலகத்திலும் சமூகங்களுக்கிடையில் பரவியுள்ள நோயாகும். ஆனால் இந்த நோய் சமூகத்துக்குள் பரவுவதை முழுமையாக இல்லாமலாக்கிய உலகில் இருக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என நான் நம்புகிறேன்.

ஆனால், கொரோனா தொற்று சம்பூரணமாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை எனவும் தொடர்ந்து மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பேணி செயற்படவேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் என்பன தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்திருந்தன.

இருந்தபோதும், அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்காக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தது.

அதனால்தான், மக்களும் கொரோனா தொடர்பாக அலட்சியமாகச் செயற்பட்டு வந்தனர். அதன் விளைவாகேவே தற்போது நாங்கள் இரண்டாம் அலைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்” என்றார்.